×

பவன் குப்தாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: நிர்பயா குற்றவாளிகள் நாள்வருக்கும் நாளை தூக்கு தண்டனை உறுதி?

புதுடெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ், அக்சய், வினய், பவன்குமார் குப்தா ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் முகேஷ், அக்சய், வினய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மற்றும் மறு சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. மூவரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் மூன்றாம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 27ம் தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தவறானது என்றும் தன்னுடைய கருணை மனு தவறான அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், பவன் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் குப்தா இன்று ஜனாதிபதி முன் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், பவன் குமார் குப்தாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உள்ளார். மற்ற மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது. இதை தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் நாளை (மார்ச் 3ம் தேதி) தூக்கில் போடுவது உறுதியாகி உள்ளது. இதற்கிடையே பவன் குப்தாவின் கருணை மனு நிலுவையில் இருந்ததால், நால்வரையும் நாளை தூக்கிலிடுவதற்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், கருணை மனு நிராகரிக்கப்பட்டிருப்பதால், பவன் குப்தாவின் மனுவையும் டெல்லி நீதிமன்றம் உடனடியாக தள்ளுபடி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Ramnath Govind Nirbhaya ,Pawan Gupta ,convict ,President ,India , Nirbhaya case, Pawan Gupta, mercy plea , President , execution
× RELATED கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் முதல்...