×

கடைசி சட்ட வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட நிர்பயா குற்றவாளி பவன் குப்தா: குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பிவைப்பு!

புதுடெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா கடைசி வாய்ப்பாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளார். டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கடுமையாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ்குமார்(32), பவன் குப்தா (25), வினய் சர்மா(26), அக்ஷய் குமார் சிங்(33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை நாளை(மார்ச் 3ம் தேதி) டெல்லி திகார் சிறையில் தூக்கில வேண்டும் என்று கடந்த 17ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அத்துடன் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த மரண தண்டனை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று பவன் குப்தாவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன், ஆர் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து பவன் குப்தா தனக்கு இருக்கும் கடைசி வாய்ப்பான கருணை மனு வாய்ப்பை கையில் எடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறுகையில், பவன் குப்தா சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்திருக்கிறோம். ஆதலால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், எனத் தெரிவித்தார். ஆனால், நீதிபதி தர்மேந்திர ராணா தண்டனையை நிறுத்த வைக்க மறுத்துவிட்டார்.

சட்டவிதியால் சிக்கல்?

சீராய்வு மனுத் தாக்கல் செய்தால், அந்த மனு விசாரிக்கப்பட்டு அதன் முடிவு வந்தபின், அடுத்த ஒருவாரத்துக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என்ற சட்டவிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. பவன் குப்தாவின் சீராய்வு மனு நிராகரிக்கப்பட்டதால், அடுத்த ஒருவாரத்துக்கு தண்டனை நிறுத்தப்படுமா? என்பது தெரியவில்லை. அதேபோல, குடியரசுத்தலைவரிடம் கருணை மனுத்தாக்கல் செய்துவிட்டால், அந்த மனுவின் மீது முடிவு எடுக்கும் வரையும், முடிவு எடுத்தபின், அடுத்த 15 நாட்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என்ற சட்டவிதி இருக்கிறது. எனவே, இந்த இரு விஷயங்களையும் மீறி நாளை தண்டனை நிறைவேற்றப்படுமா என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags : President , Nirbhaya case, Pawan Gupta, mercy petition, President, Delhi court
× RELATED ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!