×

கலவை அடுத்த வாழப்பந்தல் கிராமத்தில் 4 ஆண்டுகளாகியும் கட்டி முடிக்கப்படாத சுகாதார வளாகம்

*  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருமா?
*  வரிப்பணம் வீணாகி வரும் அவலம்

கலவை:  கலவை அடுத்த வாழப்பந்தல் கிராமத்தில் நான்கு ஆண்டுகளாகியும் கட்டி முடிக்காமல் உள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கலவை அடுத்த வாழப்பந்தல் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற சுகாதார மேம்பாட்டு நிதி ₹4 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகம் கடந்த  2014-15ம் ஆண்டு கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டது.இந்த சுகாதார வளாகத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கைப்பிடியுடன் நவீன கழிவறை கூடிய குளிக்கும் அறை, துணி துவைக்கும் இடம் என பல்வேறு வசதிகள் கொண்டு கட்டப்பட்டு வந்தது.

இதற்காக, தண்ணீர், மின்சாரம், மின் விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. மேலும் சுகாதார வளாகத்தை பராமரிக்க ஆட்களையும் நியமிக்கப்பட்டது. ஆனால், ஏனோ கட்டிட பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.இதனால், கடந்த 4 ஆண்டுகளாக சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி செடி கொடிகள், முட்புதர்கள் மண்டி பாழடைந்து காணப்படுகிறது. மேலும், அனத் அருகே அப்பகுதி பொதுமக்கள் குப்பை கொட்டி வருகின்றனர்.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. சுகாதார வளாகம் கட்டிட பணி முழுமை பெறாததால் அப்பகுதி பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கின்றனர்.கமண்டல நாக நதி ஆற்றின் ஓரம் கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் காலப்போக்கில் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ₹4 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிட பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், இந்த இடம் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. மேலும், இங்கு செடி கொடிகள் மற்றும் முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்து காணப்படுவதால் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிகிறது.இதனால், இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடனே இருந்து வருகிறோம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பல முறை புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு மக்கள் வரிப்பணத்தில் கட்டிய சுகாதார வளாகத்தை சரியான முறையில் பராமரிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்ட சுகாதார வளாகப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், அதேபோல் சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : compound ,sanctuary ,livelihood village ,village , village , livelihood next , compound, Unfinished health complex
× RELATED திடியூரில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்