×

மணிமுத்தாறு அருவி சாலைப்பணி நிறைவு 10 மாதங்களுக்குப் பின் பஸ் போக்குவரத்து தொடக்கம்: சுற்றுலா பயணிகள், தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி

அம்பை:  மணிமுத்தாறு அருவி சாலை பணி நிறைவடைந்ததையடுத்து 10 மாதங்களுக்குப்பின் நேற்று இரவு மாஞ்சோலை பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் தோட்டத்தொழிலாளர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் காப்பக பகுதியில் தனித்துவத்துடன் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. குற்றாலத்திற்கு அடுத்தபடியாக உள்ளூவாசிகள் முதல் பிற மாவட்ட, மாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பத்துடன இங்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்வர். அகஸ்தியர் அருவியை போல் இந்த அருவியிலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவது கூடுதல் சிறப்பாகும். மணிமுத்தாறு பகுதியை சூழலியல் சுற்றுலா தலமாக மாற்றிய புலிகள் காப்பகம் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அருவிக்கு செல்லும் 6.6 கிமீ தூரமுள்ள சாலை கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பின்றி முற்றிலும்  சிதிலமடைந்து போனதால் சுற்றுலா பயணிகள் குளிக்க கூட செல்ல முடியாத நிலை உருவானது.  இதுகுறித்து தினகரன் நாளிதழில் பல்வேறு தேதிகளில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 3 மீட்டர் அகலத்தில் 6.6 கிமீ தொலைவிற்கு புதியதாக தார் சாலை அமைக்க அரசு ரூ.1.8 கோடி ஒதுக்கீடு செய்தது.இதையடுத்து திருச்சி பொறியியல் வனக்கோட்டம் வாயிலாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாஞ்சோலைக்கான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு, சாலை பணிக்கான ஜல்லி பரப்பி வைக்கப்பட்டது. ஆனால் பல்வேறு குளறுபடியால் சாலை அமைக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு பணிகள் நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்டதால் வனத்துறை மனித உரிமை ஆணையத்தின் கண்டிப்புக்கு ஆளானது.

கடந்த டிச.23ம்தேதி நெல்லை வந்த மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் திருச்சி கோட்ட வன அலுவலர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டதோடு டிச. 26ம் தேதி அருவி சாலையை நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் திருச்சி பொறியியல் வன கோட்ட அலுவலர் பொங்கல் பண்டிகைக்கு முன் பணியை முடிப்பதாக உறுதி அளித்தார். ஆனாலும் சாலைப்பணி மீண்டும் முடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில நாட்கள் மட்டும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் புலிகள் காப்பக அதிகாரிகள் பிப். 1ல் சாலை மற்றும் ஓரங்களில் விலகி சிதறி கிடந்த ஜல்லியை மீண்டும் சீரமைத்தனர். இதையடுத்து கடந்த பிப். 26ம் தேதி முதல் தார் கலவை கொண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இப் பணியின் போது வாகனங்கள் செல்ல அனுமதித்தால் சாலை பணியை செம்மையாக செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என்று முற்றிலும் தடை விதித்தனர். மேலும் இயற்கை ஒத்துழைக்கும் நிலையில் சுமார் 4 நாட்களில் பணியை முழுமையாக முடித்து விடுவதாக கூறினர்.  

தலையணையில் தொடங்கிய தார் சாலை பணி நேற்று முன்தினம் செக் போஸ்ட் வரை முடிவடைந்தது.  இதையடுத்து தோட்டத் தொழிலாளர்கள் நலன் கருதி நேற்று இரவு முதல் மாஞ்சோலைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. அப்போது வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மலை சாலையில் வன விதிகளுக்கு உட்பட்டு வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகததிற்கு மேல் பயணிக்ககூடாது. ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்ல கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags : completion ,waterfront road ,Manimuttaru ,plantation workers , 10 months ,completion , Manimuthara ,Falls Road Project
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா