×

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தமிழக முதல்வரின் கடிதத்துடன் வந்த முன்னாள் எம்எல்ஏவுக்கு அனுமதி மறுப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் (அதிமுக) நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிபாரிசு கடிதத்தை பெற்று வந்தார். அக்கடிதத்தை திருமலையில் உள்ள கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி அலுவலகத்தில் வழங்கினார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதியும், அறைகள் ஒதுக்கீடும் செய்யப்படும் என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பிரபலமான பழமை வாய்ந்த கோயில்கள் பல உள்ளது. அதில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து முதல்வர்களும் முக்கிய பிரமுகர்களும் வருகின்றனர். அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு தமிழக அரசால் சிறப்பான சுவாமி தரிசனம் செய்து வைக்கப்படுகிறது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிபாரிசு கடிதத்தை இங்கு ஏற்க மறுத்துவிட்டனர்.

தமிழகத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய நிலையில் தமிழக முதல்வர் சிபாரிசு கடிதத்திற்கு சுவாமி தரிசனம் செய்து வைக்க முடியாது என்று கூறி இருப்பது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுத்து வெளிமாநிலத்தில் இருந்து வரும் பிரதிநிதிகளுக்கு உரிய கவுரவம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே ஏழுமலையான் கோயிலின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று திருமலையில் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமை தாங்கினார்.

கூட்டத்தொடர் நிறைவு பெற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் செய்தியாளர்களை சந்தித்து பட்ஜெட் குறித்து விளக்கம் அளிப்பது வழக்கம். அவ்வாறு நேற்று செய்தி சேகரிப்பதற்காக தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கில தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் சென்றனர். அப்போது தமிழ் தொலைக்காட்சியை சேர்ந்த அனைத்து ஊடக மற்றும் பத்திரிகை நிருபர்களை அனுமதிக்க முடியாது என்று தேவஸ்தான மக்கள் தொடர்பு அலுவலர் ரவி திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்காலிடம் பேசுவதற்காக தமிழ் ஊடகத்தினர் சென்றபோது அவர் பேச மறுத்து சென்றுவிட்டார்.

அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் கேட்டபோது, அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் இந்த தவறு ஏற்பட்டு இருக்கும். இனி இதுபோன்று நடைபெறாமல் செய்யப்படும் என மழுப்பலாக கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

Tags : Ex-MLA ,Thirupathi Ezumalayanai , Letter from Tirupati, Chief Minister of Tamil Nadu, former MLA, denied permission
× RELATED மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில்...