×

அருவி சாலை பணிகள் நிறைவு மணிமுத்தாறில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடக்கம்: தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி

அம்பை: மணிமுத்தாறு அருவி சாலை பணி நிறைவடைந்ததையடுத்து 10 மாதங்களுக்குப்பின் இன்று மாலை முதல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தோட்டத்தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் காப்பக பகுதியில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. குற்றாலத்திற்கு அடுத்தபடியாக  சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பத்துடன இங்கு  வந்து குளித்து மகிழ்ந்து செல்வர். இதனிடையே அருவிக்கு செல்லும் 6.6 கிமீ தூரமுள்ள சாலை பல ஆண்டுகளுக்கு மேலாக முறையான பராமரிப்பின்றி முற்றிலும்  சிதலமடைந்து போனதால் சுற்றுலா பயணிகள் குளிக்க கூட செல்ல முடியாத நிலை உருவானது.இதையடுத்து ரூ.1.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருச்சி பொறியியல்  வனக்கோட்டம் வாயிலாக  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாலை பணிக்கான ஜல்லி பரப்பி வைக்கப்பட்டது. ஆனால் சாலை பணிகளில் மந்தநிலை ஏற்பட்டதால் வனத்துறை, மனித உரிமை ஆணையம் கண்டிப்புக்கு ஆளானது.

இதையடுத்து கடந்த பிப்.1 முதல் சாலை பணிகளை புலிகள் காப்பக அதிகாரிகள் தொடங்கினர். பிப். 26ம் தேதி முதல் தார் கலவை போடும் பணி தொடங்கியது. இதையொட்டி  அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாஞ்சோலை மலைச்சாலையில் செல்ல வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில் அருவிக்கு மேல் தலையணையில் தொடங்கிய சாலை பணி நேற்று(பிப்.29) மாலை செக் போஸ்ட் வரை முடிவடைந்தது. இதையடுத்து இன்று(மார்ச்1)  மாலை முதல் தோட்டத்தொழிலாளர்கள்   நலன் கருதி மாஞ்சோலை அரசு பஸ்   இயக்கப்படுவதாக வனத்துறையினர் கூறினர். மேலும் வாகனங்கள் வன விதிகளுக்கு உட்பட்டு 30கிமீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையை கவனித்து வாகனங்களை இயக்கவேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மாஞ்சோலைக்கு 10 மாதங்களுக்கு பின் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுவதால் தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Waterfalls, Manimuthur, Bus Transport
× RELATED காரைக்குடி மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை!