×

ராணிப்பேட்டை மக்களை நீண்ட காலமாக வதைக்கும் பிரச்னை: 2.50 லட்சம் டன் குரோமிய கழிவுகளால் ஆபத்து

* சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் மக்கள்
* நீர்நிலைகள் மாசடைந்து வருவதால் வேதனை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த 1973ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு குரோமேட்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ஒரு சில காரணங்களால் அரசு மேற்கண்ட தொழிற்சாலையை தனியாருக்கு தாரை வார்த்தது. பின்னர் மற்றொரு தனியார் நிறுவனம் இதனை ஏற்று நடத்தியது. அதை தொடர்ந்து இந்த தொழிற்சாலையை திரைப்பட இயக்குனர் தர் ஏற்று நடத்தி வந்தார். தொழிற்சாலை அங்கு சரிவர இயங்காதது, தொழிலாளர்கள் பிரச்னை, வங்கிக்கடன் என்று பல்வேறு காரணங்களால் கடந்த 1995ம் ஆண்டு மூடுவிழா கண்டது. தொழிற்சாலை மூடப்பட்ட பின்னரும் அங்கு குவிக்கப்பட்டிருக்கும் 2.50 லட்சம் டன் குரோமிய கழிவுகள் அகற்றப்படாததால், பெரும் ஆபத்து ஏற்படும் நிலையாக உள்ளது.

மேலும் ராணிப்பேட்டை வட்டாரத்தின் நிலத்தடி நீராதாரதம் முழுவதுமாக மாசடைந்து வருகிறது. அகற்றப்படாத குரோமிய கழிவுகள் மழைக் காலங்களில் மழைநீரில் கலந்து மஞ்சள் மற்றும் கறுப்பு நிறமாக வெளியேறி ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுப்புறங்களில் உள்ள புளியங்கண்ணு, குருவிச்செட்டித்தாங்கல், புது ஏரி மற்றும் பல்வேறு கிராமங்களின் நீர்நிலைகள், விளைநிலங்கள் மற்றும் பாசன கிணறுகளின் நீராதாரம், பாலாறு, பொன்னையாற்று படுகைகளையும் மாசுபடுத்தி வருவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் உலகிலேயே மாசுபட்ட நகரங்களில் ராணிப்பேட்டை நகரம் முதலிடம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இதனால் ராணிப்பேட்டை மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் நிலையாக உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் குரோமிய கழிவுகள் அகற்ற அவ்வப்போது குரோமிய தொழிற்சாலைக்கு வந்து ஆய்வு நடத்தியும், மண் மாதிரிகள் மற்றும் தண்ணீர் மாதிரிகளை சேகரித்து எடுத்து செல்கின்றனர்.

ஆனால், இதுவரை மத்திய, மாநில அரசுகள் 2.50 லட்சம் டன் குரோமிய கழிவுகளை அகற்றுவதற்கான எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.  மேற்கண்ட குரோமிய தொழிற்சாலை மூடப்பட்ட போதிலிருந்தே அரசு சார்பில் 101 இடங்களில் தண்ணீர் மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் மேற்கண்ட தொழிற்சாலையில் பல்வேறு இடங்களில் மண் மாதிரிகளும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வரையில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த நவம்பர் 28ம் தேதி ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்ததுடன், பல்வேறு திட்டங்கள், சலுகைகள் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கிடைக்கும் எனவும் அறிவித்தார்.

சலுகைகள் ஒரு புறம் இருந்தாலும் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட 2.50 டன் குரோமிய கழவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு ராணிப்பேட்டை நகரை வாழ்வதற்கு ஏற்ற நகராக மாற்ற வேண்டும் ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசிடமிருந்து நிதி கிடைத்தவுடன் குரோமிய கழிவு அகற்றப்படும் -கலெக்டர்
சிப்காட்டில் குவிந்துள்ள 2.50 லட்சம் டன் குரோமிய கழிவுகள் குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியதாவது: சிப்காட்டில் உள்ள குரோமிய தொழிற்சாலையானது முதன் முதலில் அரசுக்கு சொந்தமாக இருந்தபோது எந்தவித கழிவுகள் தேக்கமும் இல்லை. சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருந்தது. இதனை அடுத்து நாளடைவில் 2 தனியாரிடம் மேற்கண்ட தொழிற்சாலையானது கைமாறியது. அப்போது மேற்கண்ட தனியார் தொழிற்சாலையை ஒரு சில காரணங்களால் மூடும்போது மேற்கண்ட குரோமிய கழிவுகளின் தேக்கம் அதிகளவில் இருந்தது. இந்த தனியார் குரோமிய தொழிற்சாலை கடந்த 1995ம் ஆண்டில் மூடப்பட்டது.

தற்போது 25 ஆண்டுகள் ஆகின்றது. மத்திய, மாநில அரசுகளும் மண் பரிசோதனைகளையும் மேலும் தண்ணீர் பரிசோதனைகளையும் பலமுறை எடுத்துள்ளது. மேற்கண்ட குரோமிய கழிவுகளை அப்புறப் படுத்துவதற்கும் இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சரி செய்வதற்கும் அரசிடம் நிதி ஆதாரமானது நிலுவையில் உள்ளது. அந்த நிதி வரும்போது மேற்கண்ட குரோமிய கழிவுகளானது அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  

விஞ்ஞான ரீதியில் குரோமிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை
குரோமிய கழிவுகள் அகற்றுவது தொடர்பாக மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் செந்தில்குமார் கூறுகையில், ‘ராணிப்பேட்டை சிப்காட் தனியார் குரோமிய தொழிற்சாலையில் குவிந்துள்ள குரோமிய கழிவுகள் சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் பலமுறை ஆய்வுகள் நடத்தப்பட்டு மண் மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வுகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட குரோமிய கழிவுகள் அகற்ற மத்திய அரசிடம் நிதி கேட்டு பெற்று விஞ்ஞான முறையில் மேற்கண்ட குரோமிய கழிவுகள் அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

குரோமிய கழிவுகள் குறித்து புளியங்கண்ணு கிராம மக்கள்
புளியங்கண்ணு கிராம மக்கள் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக மேற்கண்ட தனியார் குரோமிய தொழிற்சாலையில் 2.50 லட்சம் டன் குரோமிய கழிவுகள்  தொழிற்சாலை வளாகத்திலேயே மலைபோல் கொட்டி குவித்து வைத்துள்ளனர். மழை காலங்களில் குரோமிய கழிவுகள் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறமாக மழைநீரில் கலந்து வெளியேறி ராணிப்பேட்டை சிப்காட் சுற்றிலும் உள்ள பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகியுள்ளன. குறிப்பாக புளியங்கண்ணு பெரிய ஏரி, அருகில் உள்ள குருவிச்செட்டித்தாங்கல் ஏரி மற்றும் புது ஏரி ஆகிய 3 ஏரிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு கிராமங்களின் நீர்நிலைகள், விளைநிலங்கள் மற்றும் பாலாறு, பொன்னை ஆற்றுப்படுகைகளும் மாசடைந்து காணப்படுகிறது. எனவே ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு குரோமிய தொழிற்சாலையில் உள்ள 2.50 லட்சம் டன் குரோமிய கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


Tags : Ranipet ,Long-Term , Queenpet, problem, chromium waste, danger
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...