×

ஒகேனக்கல்லில் பரபரப்பு மலைப்பாதையில் வாகனங்களை விரட்டியடித்த ஒற்றை யானை: ஹாரன் அடித்த பஸ் டிரைவர்கள் கிலி

பென்னாகரம்: ஒகேனக்கல் மலைப்பாதையில் நேற்று மதியம் முகாமிட்ட ஒற்றை யானை ஒன்று, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளை விரட்டியடித்தது. மேலும், ஹாரன் அடித்த தனியார் பஸ்களையும் யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இருந்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு, குட்டிகளுடன் இடம்பெயர்ந்த யானை கூட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியான முண்டச்சிப்பள்ளம் பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் தண்ணீர் தேவைக்காக காலை-மாலை வேளைகளில் பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையை கடந்து, காவிரி ஆற்றுப்படுகைக்கு செல்கின்றன.

இதையடுத்து, ஒகேனக்கல் வனத்துறையினர் மடம் பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியில் முகாமிட்டவாறு, யானைகள் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நேற்று கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஆண் யானை ஒன்று, நண்பகல் வேளையில் பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையோரம் சுற்றித்திரிந்தது. திடீரென அந்த யானை சின்ன ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் நடுரோட்டிற்கு வந்தது.

இதனைக்கண்டு அந்த வழியாக ஒகேனக்கல் சுற்றுலா சென்ற பயணிகள் பீதிக்குள்ளாகினர். ஆனாலும், ஒருசிலர் மின்னல் வேகத்தில் அந்த இடத்தை கடந்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த யானை, திடீரென பயங்கரமாக பிளிறியவாறு வாகனங்களை தூரத்த ஆரம்பித்தது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் தலைதெறிக்க வாகனங்களில் தப்பினர். அப்போது, ஒகேனக்கல்லில் இருந்து பென்னாகரம் நோக்கி 2 தனியார் பஸ்கள் புறப்பட்டு வந்தது. நடுரோட்டில் யானை உலாவிக்கொண்டிருப்பதை கண்டதும், சடன் பிரேக் போட்டு பஸ்சை டிரைவர்கள் நிறுத்தினர். அதேவேளையில், யானையால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்ற பீதியில் பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் கத்தி கூச்சலிட்டனர். அப்போது, டிரைவர்கள் யானைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஹாரன் அடித்துள்ளனர். அவர்களது செயலால் எரிச்சலடைந்த ஒற்றை யானை, பஸ்களை நோக்கி விரைந்தது.

இதனால், பயந்து போன டிரைவர்கள் பஸ்களை ரிவர்ஸ் எடுத்து பின்னோக்கி ஓட்டிச்சென்றதால் மலைப்பாதை களேபரமானது. அந்த சமயத்தில் ஒகேனக்கல் தனிப்பிரிவு காவலர் சூரி தனது வாகனத்தில் அப்பகுதிக்கு வந்தார். அவர், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, அமைதி காக்குமாறு செய்தார். இதையடுத்து, ஆசுவாசமடைந்த ஒற்றை யானை, மதியம் 1 மணியளவில் அந்த இடத்தை கடந்து சென்றது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் ஒகேனக்கல் மலைப்பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Bus drivers ,Husband Bus Drivers ,Horan Horan , Horan Husband Bus, Drivers ,Killed ,Elephant
× RELATED டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது