×

தமிழகத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்து கழிவு நீர் கலந்த ஏரிகள் புனரமைப்புக்கு சுற்றுச்சூழல் துறையில் நிதி பெற முடிவு: முதன்முறையாக மாநில அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்து கழிவு நீர் கலந்த ஏரியாக மாறியதை மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில், புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்முறையாக மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிதியுதவியை பெற உள்ளனர்.  தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளின் புனரமைப்பு பணிக்கு மத்திய அரசின் ஆர்ஆர்ஆர், தேசிய வேளாண்மை திட்டத்துக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பித்தால் கிடைப்பதில்லை. குறிப்பாக, தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திட்ட அறிக்கையில் குறைபாடு இருப்பதாக கூறி, அந்த ஏரிகளை புனரமைக்க நிதி தர மறுத்து விட்டது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக 50 ஏரிகள் மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி மற்றும் பங்களிப்பு திட்டங்கள் மூலம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் கடனுதவி பெற்று தான் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால், தமிழக அரசின் கடன் சுமையும் பல மடங்கு அதிகரித்து விட்டது. இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் மாநிலங்களில் உள்ள மாசுபட்ட ஏரிகளின் புனரமைப்பு பணி மேற்கொள்ள ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பிலும் மாசுபட்ட ஏரிகளை புனரமைப்பு பணி மேற்கொள்ளும் வகையில் அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாசுபட்ட ஏரிகளை கண்டறிந்து, அந்த ஏரிகளின் புனரமைப்பு பணிக்கான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறையுடன் ஒப்புதல் பெற்று, இந்தாண்டு மத்திய அரசு பங்களிப்புடன் ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,wastewater lakes ,waste water lakes , Tamil Nadu, Drinking Water, Waters, Lakes, State Govt
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...