×

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் திடீர் மரணம் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

அண்ணாநகர்: அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் திடீரென இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை முகப்பேர், 3வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி (39). வீட்டுவேலை செய்து வந்தார். இவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருந்ததால், முகப்பேரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை  பெற்று வந்தார்.சமீபத்தில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ‘உங்களது கர்ப்பப்பை கட்டி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதை ஆபரேஷன் செய்து உடனே அகற்ற வேண்டும்’ என தெரிவித்துள்ளனர். இதற்கு தேன்மொழி சம்மதம் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து, கடந்த 24ம் தேதி தேன்மொழிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆபரேஷன் செய்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், உடனடியாக எழும்பூரில் உள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனையில்  அனுமதித்தனர்.

 அங்கு 2 நாட்கள் சிகிச்சை அளித்தும் தேன்மொழியின் உடல்நிலை மேலும் மோசமானது. இதனால், அவரை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை தேன்மொழி  பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த தேன்மொழியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர், தவறான சிகிச்சையே தேன்மொழி இறப்புக்கு காரணம் எனவும், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை கோரியும் முகப்பேரில் உள்ள தனியார்  மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருந்துரை முருகன், எஸ்ஐ தங்கதுரை தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, தேன்மொழியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை  எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




Tags : Relatives ,hospital ,operation ,Sudden Death ,Woman Who Underwent Surgery Relative Siege , sudden death, woman , hospital
× RELATED (தி.மலை) தலைமறைவாக இருந்த உறவினர்கள் 3...