×

சொத்தில் பங்கு கேட்டதால் ஆத்திரம் அண்ணனை கொல்ல முயன்ற தம்பி கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் வெங்கடேஸ்வரா நியூ காலனியை சேர்ந்தவர் ரூபஸ் முல்லர் (48). இவருக்கு திருமணமாகி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து  வருகிறார். குடிபோதைக்கு அடிமையான இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில், ரூபஸ் முல்லரின் குடும்ப சொத்தை, அவரது தம்பி போவாஸ் (43) என்பவர் விற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ரூபஸ் முல்லர் மதுபோதையில் தனது தம்பி போவாஸிடம் சென்று, சொத்து விற்றதில் தனது  பங்கை கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த போவாஸ், அண்ணன் ரூபஸ் முல்லரை கற்களால் சரமாரி தாக்கி, கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பிய ரூபஸ் முல்லர் புளியந்தோப்பு புதிய  பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார். போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அரசு மருத்துவமனையில் ரூபஸ் முல்லர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து போவாஸை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கப்பல் பழுது பார்க்கும் பணியாற்றி வருபவர்கள் சாமுவேல் (24), அஜித் (26), நரேஷ் (20), அருண் (20), விஜி (20). இவர்கள் அனைவரும் நண்பர்கள். இதில் சாமுவேல் அடிக்கடி மது அருந்திவிட்டு போதையில்  மற்ற நண்பர்களின் பாக்கெட்டில் இருந்து பணம் எடுப்பது, மீன்பிடி துறைமுகத்திற்கு வரும் சிறுவர்களிடம் பீடி, சிகரெட் வாங்கி புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் துறைமுகம் பகுதியில் இருந்த சிறுவர்களிடம் பீடி வாங்கி புகைத்துள்ளார். இதனை பார்த்த மற்ற 4 நண்பர்கள், “ஏன் இவ்வாறு செய்கிறாய்” என கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த 4 பேரும் சாமுவேலை தாக்கி, அங்கிருந்த கல்லை எடுத்து அவர் தலையில் போட்டுவிட்டு தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த சாமுவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து அஜித், நரேஷ், அருண், விஜி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.




Tags : brother , Furious ,hearing,property, kill ,brother
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...