×

கருடா மேம்பாலத்தில் வரைந்த திருநாமத்துக்கு பதிலாக ஸ்மார்ட் சிட்டி சின்னம்: திருப்பதியில் தீராத குழப்பம்

திருமலை: திருப்பதி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சில்பாராமம் முதல்  நந்தி சந்திப்பு வரை 6 கி.மீ.-க்கு கருடா மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. திருப்பதி ஆன்மிக நகரம்  என்பதால், இந்த பாலம் அமைக்கும் பணியில் எங்கு பார்த்தாலும் ஆன்மிக சிந்தனையை ஏற்படுத்தும் விதமாக  அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மேம்பாலத்திற்காக அமைக்கும் தூணில் ஏழுமலையானின் அடையாளமாக விளங்கும்  திருநாமம் அச்சாக பொருத்தப்பட்டது. இந்த திருநாமம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

அதில், தென்கலை நாமம் வரையப்பட்டதாக கூறி வடகலை நாமம் அணிபவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், இருதரப்பினருக்கும் பொதுவான ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் பா நாமம் கடந்த மாதம் அனைத்து தூணிலும்  வரையப்பட்டது. இதற்கு சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில், ஏழுமலையானின் புனிதமாக கருதக்கூடிய  நாமத்தை தூணில் அமைத்துள்ளதால், அதன்மேல் வாகனங்கள் சென்றால் நாமத்தின் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்றனர்.  இது குறித்து பல்வேறு புகார்களை தேவஸ்தான தலைமை செயல் அலுவலருக்கு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், திருப்பதி மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி பூங்கா அருகே உள்ள மேம்பால தூணில் இருந்த நாமத்தை அகற்றி, அங்கு நேற்று ஸ்மார்ட் சிட்டி திட்ட லோகோவை பொருத்தினர். இதற்கும் ஆன்மிக சிந்தனையாளர்கள் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். அதில் திருப்பதி ஆன்மிக நகராக விளங்கக்கூடிய நிலையில், கருடா மேம்பால தூணில் வரையப்பட்ட ஏழுமலையானின் திருநாமம் பார்ப்பதற்கு அழகாகவும் ஆன்மிக சிந்தனையை கூட்டும் விதமாக அமைந்திருந்தது.  ஆனால்,  ஸ்மார்ட் சிட்டி லோகோவை இடம்பெற செய்திருப்பது சரியானதாக இல்லை என்றனர்.



Tags : Smart City ,nickname ,Garuda Bridge ,Bridge ,Garuda ,Smart City Symbol , Painted ,Garuda Bridge, Smart City ,Symbol ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...