×

மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவிட்ட நீதிபதி நள்ளிரவில் இடமாற்றம்

* டெல்லி கலவர வழக்கில் அதிரடி திருப்பம்
* எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்தாத மத்திய அரசு மற்றும் மாநில போலீசாரை கடுமையாக விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் நள்ளிரவில் அதிரடியாக பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கலவரம் வெடித்ததும், வன்முறையை ஒடுக்கவும், கலவரக்காரர்களை கைது செய்யக்கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மனுவின் அவசரம் கருதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நீதிபதி முரளிதர் வீட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து நீதிபதி போலீசாருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். நேற்று முன்தினம் மீண்டும் அந்த வழக்கு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் வெறுப்புணர்வுடன் பேசியதாக குற்றச்சாட்டுகள் மனுதாரர்கள் சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி முரளிதர் அதற்கான ஆதாரத்தை கேட்டார். அதன்பேரில் பாஜ தலைவர்கள் சிலரது பேச்சு, அவர்கள் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்ட தகவல்கள் ஆகியவை நீதிமன்றத்தில் வீடியோ ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அதனை பரிசிலனை செய்த நீதிபதி முரளிதர், பாஜ தலைவர்கள், மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, அபய் வர்மா, பர்வேஷ் சர்மா ஆகிய 4 பேர் மீதும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதற்கு ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் 4 பேர் மீது உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் நீதிபதி முரளிதர், மத்திய அரசு, டெல்லி மாநில அரசு மற்றும் டெல்லி போலீசார் ஆகியோரை மிக கடுமையாக விமர்சித்தார். அதில், “நாட்டில் 1984ம் ஆண்டு நடந்தது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்க நாங்கள் அனுமதிக்க முடியாது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என கண்டிப்புடன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு வியாழக்கிழமைக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.  நீதிபதி முரளிதரின் மேற்கண்ட உத்தரவு பா.ஜ மூத்த தலைவர்களிடம் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் உடனடியாக அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி முரளிதர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான அரசாணை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால் அதில், நீதிபதி முரளிதர் எப்போது பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்திற்கு சென்று பொறுப்பேற்க வேண்டும் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் டெல்லி உயர் நீதிமன்ற பணிகளை விடுத்து உடனடியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இடமாற்றம் செய்யப்படும் நீதிபதிகளுக்கு புதிய இடப்பணியை ஏற்க சுமார் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர் விளக்கம்: நீதிபதி முரளிதர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் 3வது மூத்த நீதிபதி அந்தஸ்தில் இருப்பவர். இதே இடத்திற்கு தான் அவர் தற்போது பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்திற்கும்  மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதில், நாட்டையே உலுக்கிய டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் திடீரென மாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய அரசு இதை முற்றிலும் மறுத்துள்ளது.

நீதிபதி முரளிதர் இடமாற்றம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் கடந்த 12ம் தேதி செய்த பரிந்துரைப்படிதான், நீதிபதி முரளிதர் பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்’’ என்றார். பாஜ மூத்த தலைவர்கள் கூறும்போது, ‘நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு சில பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வழக்கமான இடமாற்றத்தை அரசியலாக்கி இருப்பது, நீதித்துறை நடைமுறை பற்றி காங்கிரசுக்கு போதிய தெளிவு இல்லாததை மீண்டும் காட்டியுள்ளது’ என்றனர். நீதிபதிகள் மாற்றம் குறித்து கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தாலும், நீதிபதி முரளிதர் மாற்றப்பட்ட சூழல் தான் தற்போது மத்திய அரசுக்கு எதிரான மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 2 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் வசந்தரோ மோர், மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கும், கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ரவி விஜய்குமார் மாலிமத், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவு அவர்கள் இருவருக்கும் தனித்தனியே அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

Tags : Judge ,Union Minister Union Minister , Judge ordered , sue the Union Minister
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...