×

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடாவிட்டால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் : ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடவேண்டுமென்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் நிறைவேற்ற தவறினால், தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை புழலை சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து,   அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட வாரியாக அமைந்துள்ள குடிநீர் உற்பத்தி ஆலைகள் குறித்த பட்டியலை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், மொத்தமுள்ள 261 யூனிட்டுகளில் உரிமம் பெறாமல் செயல்படக்கூடிய 132 யூனிட்டுகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை அனுப்பியுள்ளதாகவும் 13 யூனிட்டுகள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை சரியாக அமல்படுத்தாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை அர்த்தமற்றதாக உள்ளது.  நிலத்தடி நீரை எடுக்கும் ஆலைகளுக்கு உரிமம் வழங்க வகை செய்யும் அரசாணையை உறுதி செய்து 2018 அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தவில்லை. அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகள் தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அதற்காக ஒரு குழுவை அமைக்க 2019 செப்டம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். ஆனால், அப்படி எந்த சட்டமும் கொண்டுவரப்படவில்லை. இந்த வழக்கு பொதுநல வழக்கு. இதில் தனிப்பட்ட நிறுவனங்கள் தங்களை இணைக்க வேண்டும் என்று கோரி பல மூத்த வக்கீல்கள் ஆஜராகியுள்ளனர். இந்த வழக்கு இயற்கை வளங்களை பாதுகாக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு. தனிப்பட்டவர்களுக்காக அல்லாமல் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளில் நிலத்தடி நீரை உறிஞ்சும் யூனிட்டுகளை (கிணறு, போர்வெல்) மட்டுமே மூட வேண்டும், முழு ஆலையையும் மூடக்கூடாது என்று தனி நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவேண்டும். எனவே, அனுமதியின்றி செயல்படக்கூடிய குடிநீர் ஆலைகளை மூட பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து மார்ச் 2ம் தேதிக்குள் (அன்றைய முறையான லைசென்ஸ் வைத்திருக்கவில்லை என்றால்) மூட வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். இந்த விஷயத்தில் எந்த துறையும் மன்னிப்பு கேட்க கூடாது. உத்தரவை 32 மாவட்டங்களிலும் அமல்படுத்தி மார்ச் 3ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால், தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : water plants ,Chief Secretary ,drinking water plants , unauthorized drinking water plants , Chief Secretary , present in person
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...