×

ஆழியார் அணை நீர்மட்டம் 68 அடியாக சரிவு: கோடையில் குடிநீர் தேவையை சமாளிக்க முடியுமா?

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த, பிஏபி., திட்டத்தில் உள்ள மொத்தம் 120 அடி கொள்ளளவு  கொண்ட  ஆழியார் அணைக்கு கான்டூர் கால்வாய், பீடர் கால்வாய், சின்னாறு, அப்பர் ஆழியார், குரங்கு அருவி, காடம்பாறை ஆகியவற்றில் இருந்து  தண்ணீர் வருகிறது. இந்த அணையில் சுமார் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஆழியார்  அணையிலிருந்து வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை மற்றும் பொள்ளாச்சி கால்வாய்களுக்கும். பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அதுபோல் கேரளாவுக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீர் பாசனம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்படுகிறது. ஆழியாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் பொள்ளாச்சி, குறிச்சி, குனியமுத்தூர் நகராட்சிகள் மற்றும் வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் பிஏபி. திட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் குறைந்து வறட்சியை சந்திக்கும்போது, ஆழியார் அணையில் மட்டும் ஓரளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படும். கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை ஓரளவு இருந்தது. இதனால் அந்த ஆண்டுகளில் குறிப்பிட்ட சில மாதங்களில் அணை தனது முழு கொள்ளளவையும் எட்டியது.

இதில், கடந்த 2019ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையும் அடுத்தடுத்து பெய்ததால்,  ஆழியார் அணைக்கு வரத்து அந்நேரத்தில் அதிகமாக இருந்ததுடன். கடந்த டிசம்பர் மாதம் வரை அணையின் நீர்மட்டம் 110 அடிக்கு மேல் இருந்தது. ஆனால், வடகிழக்கு பருவமழைக்கு பிறகு கடந்த சில மாதமாக மழையில்லாததால், அணைக்கு நீர் வரத்து நாளுக்கு நாள் குறைய துவங்கியது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அப்பர் ஆழியார் மற்றும் காடாம்பாறை அணையிலிருந்த விநாடிக்கு 250 கன அடி முதல் 300 கன அடி வரையிலும் தண்ணீர் திறப்பு உள்ளது.

இருப்பினும் ஆழியார் அணையிலிருந்து கடந்த இரண்டு மாதமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும்,  குடிநீர் தேவைக்கும் மற்றும் கேரளாவுக்கும் சேர்த்து வினாடிக்கு சுமார் 750 முதல் 800 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு தொடர்கிறது. ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு தொடர்வதால், அதன் நீர்மட்டம் குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 68 அடியாக சரிந்துள்ளது. நீர்மட்டம் குறைந்து வருவதால், அணையின் பெரும்பகுதி, பாறைகள் மற்றும் மணல் மேடான பகுதியாக தெரிகிறது.

கடந்த 2011ம் ஆண்டு தண்ணீர் வரத்து இன்றி அணை வறண்டதுபோல், இப்போது மீண்டும் அணைப்பகுதி வறண்டு வருகிறது.  இனி வரும் காலங்களில், அணையில் தண்ணீரை சேமித்தால்தான் கோடை காலத்தின்போது, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என விவசாயிகள்  தெரிவித்தனர்.

Tags : Aliyar Dam ,collapse , Aliyar Dam, Waterfall Decline, Summer
× RELATED ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு