×

ஆண் யானையுடனான மோதலில் காயமடைந்த பெண் யானை: வனத்துறையினர் மருத்துவ சிகிச்சை

வால்பாறை: வால்பாறையை அடுத்து ஈட்டியார் எஸ்டேட் வனப்பகுதியில் ஆண் யானை  தாக்கியதில் இடது முன் கால் பகுதியில் ரத்த காயம் அடைந்த பெண் யானைக்கு  வாழைப்பழத்தில் மாத்திரைகள் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த  சில தினங்களுக்கு முன்பாத பெரியகல்லார் எஸ்டேட்டில் 2 காட்டு யானைகள்  ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது. அதில் ஏற்பட்ட சத்தம் அப்பகுதி மக்களை  பீதியடைய செய்த நிலையில், சிலர் ஓடி சென்று பார்த்தில் ஆண் யானை ஒன்று பெண்  யானையை கடுமையாக தந்தத்தால் குத்தி சண்டையிட்டதை கண்டு  அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவம் அறிந்த மானம்பள்ளி வனச்சரகர் நடராஜ் அப்பகுதிக்கு சென்று வனத்துறை  ஊழியர்களுடன் பார்வையிட்டார். இருப்பினும் இரு யானைகளும் சண்டையை நிறுத்தி  விட்டு காட்டிற்குள் சென்றதால், காயம் அடைந்த யானைக்கு  உடனடியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை காயமடைந்த பெண் யானை,  உப்பாசி எஸ்டேட் வழியாக, ஈட்டியார் எஸ்டேட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு  திரிவதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இந்நிலையில் இது குறித்து கள இயக்குநர் சேவியர் உத்தரவின் பேரில், வனத்துறை டாக்டர் மனோகரன் கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டு, காயங்கள் குறித்து ஆய்வு  செய்யப்பட்டது. பிற்பகல் வனத்துறை மருத்துவ குழுவினரின் ஆலோசனையின் பேரில்  நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வாழைப்பழத்தில் வைத்து யானைக்கு  வழங்கப்பட்டது. தொடர்ந்து யானை சோர்வாக உள்ளதால், வனத்துறை அதிகாரிகள்  சிறப்பு குழு ஏற்படுத்தி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags : conflict ,Forest Department , Male elephant, conflict, female elephant
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...