×

மூளை வளர்ச்சி குன்றிய மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கவேண்டும்: விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் தாய் மனு

விருதுநகர்: மூளை வளர்ச்சி குன்றிய தனது 13 வயது மகனை கருணை கொலை செய்ய  அனுமதிக்க கோரி மனு அளிக்க வந்த பெண்ணால், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி, ஆறுமுகம் காலனியை சேர்ந்த பாண்டிதேவி (33) என்ற பெண் தனது 13 வயது மூளை வளர்ச்சி குன்றிய மகனை தூக்கிய நிலையில், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். தனது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென மனு அளித்தார். பாண்டிதேவி கூறுகையில், ‘‘எனது கணவர் சரவணன் (37) 2.5.2019ல் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்தார். எனக்கு 9வது படிக்கும் மகள், மூளை வளர்ச்சியில்லாத 13 வயது மகன் உள்ளனர். கணவர் இறந்ததற்கு நிவாரணம் கோரி நலவாரியத்தில் மனு அளித்தும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

தந்தை, சகோதரன் உயிரிழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் தான் வசிக்கிறேன். வருமானத்திற்கு வழியின்றி சிரமப்படும் நிலையில், 10ம் வகுப்பு படித்த எனக்கு அங்கன்வாடி பணியாளர் வேலை கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் வேலை வழங்கவில்லை. எனது தாய், வீட்டு வேலை செய்து எங்களைக் காப்பாற்றி வருகிறார். மூளை வளர்ச்சி குன்றிய மகனை காப்பாற்றவும், மகளை படிக்க வைக்கவும் ஏதாவது ஒரு வேலை வேண்டும். இல்லையென்றால் மூளை வளர்ச்சி குன்றிய மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்க வழங்க வேண்டும்’’ என்றார். குறைதீர்க்கும் கூட்டத்தில் பாண்டிதேவி அளித்த மனுவை பெற்ற டிஆர்ஓ உதயக்குமார், அங்கன்வாடி பணி நியமனத்தின்போது முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தார்.

மேலும் சிவகாசி ஆர்டிஓ மூலம் அரசு அலுவலங்களில் தற்காலிக வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உத்தரவாதம் அளித்து பாண்டிதேவியை அனுப்பி வைத்தார். பெற்ற மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரிய தாயால்,  விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Virudhunagar ,grievance meeting Brainstorming son ,grievance meeting , Petition, Virudhunagar, petition
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...