×

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கம்: அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்

வேலூர்: வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி மார்க்கங்களில் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று காலை முதல் இயங்க தொடங்கின. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம் பிடித்துள்ள வேலூர் மாநகராட்சியில் பல்வேறு கட்ட வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வேலூர் புதிய பஸ் நிலையத்தை நவீன கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டும் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே கலெக்டர் சண்முகசுந்தரம், டிஆர்ஓ பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

பஸ் பயணிகள் வசதிக்கென செல்லியம்மன் கோயில் பின்புறம் உள்ள பஸ் நிலையத்தின் காலியிடத்தில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அங்கு பஸ்கள் நின்று செல்வதற்கான சாலை வசதியுடன், பயணிகளுக்கான தற்காலிக நிழற்குடையும் அமைக்கப்பட்டன. அதேபோல் பயணிகளுக்கான குடிநீர், கழிப்பறை, நிழற்கூரை, மின்விளக்கு, பஸ்கள் செல்லும் வழித்தடங்களின் விவரங்களை தெரிவிக்கும் பெயர் பலகைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, ஓட்டல் அமைந்திருந்த பகுதியில் உள்ள மரங்களை அகற்றுதல், சாலையின் அளவுக்கு மேல் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சமன்படுத்தும் பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் அங்கு ஆய்வு மேற்கொண்ட டிஆர்ஓ பார்த்தீபன் அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று காலை முதல் ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம் மார்க்கங்களில் செல்லும் அனைத்து அரசு, தனியார் பஸ்கள் இயங்கத் தொடங்கின. அதேபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இதுவரை இயக்கப்பட்ட புறநகர் டவுன் பஸ்கள், ஒடுகத்தூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் வழக்கம்போல் பழைய பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், பெங்களூரு செல்லும் பஸ்களும், சித்தூர் மார்க்கமாக செல்லும்் பஸ்களும் இயக்கப்படுகின்றன.இந்த மாற்றம் காரணமாக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக பஸ்கள் வந்து செல்லும் என்பதால் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடிநீர், கழிவறை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், மேலும் என்னென்ன குறைகள் என்பது குறித்து கண்டறிந்து களையப்படும் என்றும் டிஆர்ஓ பார்த்தீபன் தெரிவித்தார்.

இந்நிலையில், வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுவதை ஆர்டிஓ ராமகிருஷ்ணன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, 2வது மண்டல அலுவலர் மதிவாணன், மாநகராட்சி 4வது மண்டல பொறியாளர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags : road ,bus station ,Thiruvannamalai ,Anna ,Villupuram ,Velupuram ,Aranyam , Vellore, Anna Road, Traffic
× RELATED அரசு பஸ் கண்டக்டர் மண்டை உடைப்பு...