×

அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க நவீன வாகனம் மூலம் பராமரிப்பு பணி: தமிழக மின்சார வாரியம் தீவிரம்

சென்னை: வெயில் காலம் விரைவில் துவங்கவுள்ள நிலையில், மின்தடை ஏற்பட்டு விடாமல் தடுக்க, பல்வேறு இடங்களில் ‘ஹாட் லைன் வாஷிங் யூனிட்’ வாகனம் மூலம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக மின்சார வாரியம் தீவிரம்  காட்டி வருகிறது.
தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகள்-2 கோடி, வணிகம்-35 லட்சம், தொழிற்சாலைகள்- 7 லட்சம், விவசாயம்-21 லட்சம் என மொத்தம் 2.90 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன. இதற்கு தேவையான மின்சாரம் அனல், நீர்,  காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்டவற்றின் மூலம் தயாரிக்கப்படுகிறது. பிறகு டவர்கள் மூலமாக துணைமின்நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு, அழுத்தம் குறைக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விநியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில் தமிழகம் கடற்கரை மாநிலமாக இருப்பதால், மழை, புயலின் போது அதிகப்படியான பாதிப்பு ஏற்படுகிறது. இதேபோல் சில இடங்களில் உள்ள மின்வயர்களில் சல்பர், உப்பு, சாம்பல் போன்றவை படிந்து விடும்.குறிப்பாக இப்பிரச்னை உயர்அழுத்தம் கொண்ட மின்பாதைகளில் அதிக அளவில் நடக்கிறது. இதை நீக்காவிட்டால் நாளடைவில் அவை முற்றிலுமாக பரவி, மின்விநியோகத்தில் சிக்கல் ஏற்படுத்திவிடும். இதனாலும் அடிக்கடி மின்தடை  ஏற்படுகிறது.

எனவே இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் ‘ஹாட் லைன் வாஷிங் யுனிட்’ என்ற பிரத்தியேக வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சல்பர், உப்பு, சாம்பல் போன்றவை அவ்வப்போது நீக்கப்பட்டு வருகிறது. விரைவில்  வெயில்காலம் துவங்கவுள்ளதால் இந்த வாகனத்தைக்கொண்டு பராமரிப்புப்பணி மேற்கொள்வது தீவிரமடைந்துள்ளது.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மின்தடையை குறைக்க வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒருசில இடங்களில் உள்ள மின்காப்பான்கள் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக புதிய மின்காப்பான்கள் ெபாருத்தப்பட்டு வருகிறது. மேலும் மின்  உபகரணங்களின் வெப்ப அளவு, நவீன கேமரா மூலம் அளவிடப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. மேலும் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘டிரோன்’ மூலமாகவும் மின்நிலையத்தை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.  இதன்மூலம் மின்தடை குறைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பராமரிப்புப்பணி செய்யும் போது, மின்தடை செய்யாமலும், மின்தடை செய்தும் மேற்கொள்ளப்படுகிறது.

ஒருசில இடங்களில் மின்தடைசெய்யாமல் பழுது நீக்க முடியாத சூழ்நிலை இருந்தது. தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சியின் மூலம், மிக உயர் அழுத்த பாதைகளில் மின்தடை செய்யாமல் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இதற்கான பிரத்தியேக வாகனங்கள், உபகரணங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்ஒருபகுதியாக மாசடைந்த மின்பாதைகளை சுத்தப்படுத்தும் பணி ‘ஹாட் லைன் வாசிங் யுனிட்’ என்ற வாகனம் மூலம்  மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் வெயில்காலம் துவங்குவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதிய கருவிகள் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு  அவர்கள் கூறினார்.

Tags : Tamil Nadu Electricity Board , frequent ,combustion, Modern, Board Intensity
× RELATED மின்கம்பத்தில் ஏறி பணியாற்றும்போது...