கிருஷ்ணகிரி: சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி நேற்று பாஜவில் சேர்ந்தார். கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பாஜவில் இணையும் விழா நேற்று நடந்தது. இதில் பாஜ தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கலந்து கொண்டார். அப்போது சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜவில் சேர்ந்தார். அவர் பேசும்போது, ‘எனது தந்தை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பார். ஆனால் அவர் தவறான பாதைக்கு சென்றுவிட்டார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், நான் பாஜவில் இணைந்துள்ளேன்’ என்றார்.
பின்னர் பாஜ தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியதாவது: 1947ல் பாகிஸ்தானில் 24 சதவீத இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது அது ஒரு சதவீதமாக மாறியுள்ளது. அதே சமயம், இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால், இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த சட்டத்தில் ஒரு வரியில் கூட, இஸ்லாமியர்களுக்கு எதிரான வார்த்தைகள் இல்லை. பாஜ ஆட்சியில் 8 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக 35 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர், பாஜவில் இணைந்தனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.