×

மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே மகா சிவராத்திரியையொட்டி தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா நேற்று நடந்தது. பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் குரும்பகவுண்டர் இனத்தின் குலதெய்வமான தொட்டம்மா சின்னம்மா என்றழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று பக்தர்கள் தானே தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் கோவை மாவட்டம் கல்வீராம்பாளையம், வடவள்ளி, உச்சையனூர், தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, தீத்திபாளையம், ஓநாய்பாளையம், பூச்சியூர், சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், வன்னிக்காரம்பாளையம், பச்சாபாளையம், பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம், கோவிந்தபாளையம், இடிகரை, வீரபாண்டிபுதூர் கிராமங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை 5 மணிக்கு மகாலட்சுமி மற்றும் பொம்மையன் பொம்மி கோயில்களில் அலங்கார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர், தாரை தப்பட்டை முழங்க 3 ஆலயங்களிலும் சாமி முன்பு வைக்கப்பட்ட தேங்காய்களை பக்தர்கள் எடுத்து கோயிலின் வெளியே வந்து தலையில் உடைத்து வழிபாடு நடத்தினர். காலை வரை அனைவரும் கண் விழித்து மகா சிவராத்திரி விழாவை கொண்டாடினர். தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துவது குறித்து அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கிராம பெரியவர்கள் கூறுகையில், `தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய் நொடி அண்டாது. அதே சமயம் தவறு செய்தவர்கள் தேங்காய் உடைத்தால் தலையில் வலி ஏற்படும். ஆண்டுதோறும் தலையில் தேங்காய் உடைத்து குலதெய்வத்தை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் மற்றும் நினைத்தது நிறைவேறும்’ என்றனர். இந்த வினோத திருவிழாவை சுற்று வட்டார கிராம மக்கள் வந்து கண்டுகளித்தனர்.

Tags : festival ,devotees ,Maha Sivaratri , Maha Shivaratri, Pilgrims, Coconuts, Exotic Festival
× RELATED அக்னி வசந்த விழாவில் அர்சுனன் தபசு நாடகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு