×

தாளவாடியில் புலி சடலம் மீட்பு: வனத்துறையினர் விசாரணை

சத்தியமங்கலம்: தாளவாடியில் மர்மமான முறையில் ஆண் புலி இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  புலிகள் காப்பகத்தை சேர்ந்த தாளவாடி  வனச்சரகத்திற்குட்பட்ட கோடம்பள்ளி தொட்டி வனப்பகுதியில் வனச்சரக அலுவலர்  சிவகுமார் தலைமையில் வன ஊழியர்கள் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது  வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. வனவிலங்கு ஏதாவது இறந்து கிடக்கிறதா?  என வனத்துறையினர் தேடி பார்த்தபோது ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது.   இதுகுறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலர் நாயுடுவிற்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஈரோடு வன பாதுகாப்பு  படை உதவி வனப்பாதுகாவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் சத்தியமங்கலம் புலிகள்  காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் ஆண் புலியின் உடலை பரிசோதனை செய்தார். இதையடுத்து, புலியின் உடல் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது. இந்த புலி எப்படி இறந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் சத்தியமங்கலம்  அருகே உள்ள பெரியகுளம் பகுதியை சேர்ந்த  தினேஷ்குமார் என்பவர் தோட்டத்தில் சிறுத்தை குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் இப்பகுதியில் தாய் சிறுத்தை நடமாடுவது உறுதி செய்யப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த சிறுத்தை  குட்டியை தேடி தாய் சிறுத்தை வரும் என்பதால் கூண்டு வைத்து சிறுத்தையை  பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiger ,department investigation ,Forest , Tiger
× RELATED அமராவதி வனச்சரகத்தில் இரை தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்