×

பல்வேறு முறைகேடு புகார் எதிரொலி குரூப் 4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

* மார்ச் 17ம் தேதி வரை நடக்கிறது
*  டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கடும் கட்டுப்பாடு

சென்னை: பல்வேறு முறைகேடு புகார்களுக்கு ஆளான, குரூப் 4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தொடங்கியது.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில்(2018-2019, 2019-2020ம் ஆண்டுக்கானது) காலியாக இருந்த 9,398 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடத்தியது. இத்தேர்வை 16.30 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து நவம்பர் 12ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டனர்.தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களில் வந்து, முறைகேடு புகாரில் சிக்கிய 39 தேர்வர்களுக்கு பதில், வேறு 39 பேர் தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்தது. தொடர்ந்து குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையே கடந்த 7ம் தேதி குரூப் 4 பதவிகளுக்கான காலி இடங்களுக்கான எண்ணிக்கை 484 அதிகரிக்கப்பட்டது. அதாவது, 9398 காலி பணியிடங்களில் இருந்து பணியிடங்களின் எண்ணிக்கை 9882 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் முதல் கட்டமாக குரூப் 4 பணியில் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நேற்று முன்தினம் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு 11138 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தினமும் 250 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 17ம் தேதி வரை நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற மையங்களுக்கு தேர்வர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்களுடன் வந்தவர்கள் டிஎன்பிஎஸ்சி வாசலுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் சான்றிதழ் சரிபார்ப்பை முன்னிட்டு டிஎன்பிஎஸ்சி மையம் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



Tags : Echo Group 4 ,Abuse Conflict Echo Group 4 Work Beginning , Miscellaneous abuse, Group 4 work, certification verification
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...