×

ஜம்மு-காஷ்மீரில் விபிஎன் மூலம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு: சைபர் பிரிவு போலீசார் நடவடிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தடையை மீறி விபிஎன் மூலமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க மொபைல் போன், இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு இயல்பு நிலை திரும்பியதால் முதலில் தரைவழி தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது. அதன்பின் கடந்த 25ம் தேதி முதல் மொபைல் போன் சேவை, இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. எனினும், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு இணையதள சேவை முடக்கப்பட்டு பின் இணைய சேவை வழங்கப்பட்டாலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தடைகளை மீறி விபிஎன் (Virtual Private Networks) மூலமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் சிலர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

அரசின் உத்தரவை மீறியதாகவும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறி ஜம்மு-காஷ்மீர் சைபர் பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பிரிவினைவாத சித்தாந்தங்களை பரப்பும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை சமூகவிரோதிகள் பரப்பி வந்ததால், சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தற்போது நடைமுறையில் இருக்கும் 2ஜி இணைய சேவை வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. குறிப்பிட்ட 1,485 இணையதளங்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம். சமூக வலைதளங்கள், விபிஎன்சேவைக்கு அனுமதி இல்லை. இதேபோல 3ஜி, 4ஜி இணைய சேவை மீது விதிக்கப்பட்ட தடை தொடரும், என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : unit policemen ,Social Media Users ,Jammu And Kashmir , Jammu and Kashmir, VPN, Social Websites, FIR
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!