×

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக முதல்வரிடம் அதிமுகவினர் புகார்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை: தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.சி.ஜெகநாதன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.ராஜசேகரன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் நேற்று கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலில் எனது (ராஜசேகர்) மனைவி மோகனவள்ளிக்கு ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக உடுமலை சட்டமன்ற உறுப்பினரும், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான ராதாகிருஷ்ணன், பிரபாவதி ஈஸ்வரன் என்பவரை சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கி, அமைச்சரே நேரில் வந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

மேலும் அதிமுக சார்பாகவும், கூட்டணிகள் சார்பாகவும் 24 மற்றும் 25வது வார்டு ஒன்றியக்குழு வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கவில்லை. இதனால் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். எனவே அதிமுகவிற்கும், இரட்டை இலைக்கும் எதிராக பணியாற்றி, கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்திய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீதும், திருப்பூர் மாவட்ட ஆவின் தலைவர் கே.மனோகரன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, ஆனந்தவேணி பன்னீர்செல்வத்துக்கு உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 18வது வார்டில் கோபாலகிருஷ்ணனுக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பிரபாவதி செல்வராஜ், கவுன்சிலர் பதவிக்கு குப்புசாமி ஆகியோரை சுயேட்சையாக போட்டியிட வைத்து வெற்றிபெற வைத்தார். மேலும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் சூதாட்ட கிளப் நடத்தி வரும் ஒருவருக்கு கால்நடை பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர் பதவி வாங்கி கொடுத்துள்ளார். எங்கள் பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்களை மதிக்காமல், பணத்தை வாங்கிக் கொண்டு பல்வேறு மாற்று கட்சியினருக்கு அரசு வேலை, டெண்டர் வழங்குவது உள்ளிட்ட செயல்களில் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் செயல்படுகிறார்கள். இதனால் உண்மையான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதனால் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக்கு விசுவாசமானவர்களுக்கு அதிமுக கட்சியில் பதவி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Tags : Udumalai Radhakrishnan ,AIADMK ,Chief Minister , Minister, Chief Minister, PM, complained
× RELATED அதிமுக தொழில்நுட்ப பரிவு மண்டலச்...