பெங்களூரு: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ், சொந்த மண்ணில் விளையாடிய கடைசி தொடரில் 2வது இடம் பிடித்து ரசிகர்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றார்.கடந்த 30 ஆண்டுகளாக டென்னிஸ் களத்தில் கலக்கி வரும் லியாண்டர் (46 வயது), இந்த ஆண்டுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். பெங்களூரு ஓபன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து களமிறங்கிய அவர், பைனலுக்கு முன்னேறி அசத்தினர்.
இறுதிப் போட்டியில் இந்தியாவின் பூரவ் ராஜா - ராம்குமார் ராமநாதன் ஜோடியுடன் நேற்று மோதிய லியாண்டர் - எப்டன் இணை 0-6, 3-6 என்ற நேர் செட்களில் தோற்று 2வது இடம் பிடித்தது. சொந்த மண்ணில் லியாண்டர் விளையாடிய கடைசி போட்டி இது என்பது குற்றிப்பிடத்தக்கது. இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பேசிய பயஸ், ‘இந்தியாவில் எனது கடைசி போட்டியை விளையாடிவிட்டேன். ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடும்போதுதான் இதை என்னால் உணர முடிந்தது. இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.