×

டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: தனியாருக்கு தாரைவார்ப்பதா? முகவர்கள் சங்கம் எச்சரிக்கை

சென்னை: டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது பால் கொள்முதல் நிலையங்களில் இருந்து ஆவின் பால் பண்ணைகளுக்கு பால் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். வாகன எரிபொருள் விலை உயர்வு, வாகன பராமரிப்பு, காப்பீடு கட்டணம், ஓட்டுனர் உள்ளிட்ட பணியாளர்கள் சம்பள உயர்வு என லாரி உரிமையாளர்களின் செலவினங்கள் பலமடங்கு உயர்ந்து விட்ட நிலையில் அது எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே கடந்த 2011ம் ஆண்டு நிர்ணயம் செய்த ஒரு கிலோ மீட்டருக்கு 27.60 காசுகள் என்கிற வாடகை முறையையே கடைபிடித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அந்த ஒப்பந்தம் கடந்த 2018 டிசம்பர் 15ம் தேதி காலாவதியாகி விட ஆவின் ஒன்றியங்கள் கவனித்து வந்த லாரி உரிமையாளர்கள் ஒப்பந்த முறையை ரத்து செய்து தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு இயக்கப்படும் லாரி ஒப்பந்தத்தை கிறிஸ்டி புட்ஸ் எனும் நிறுவனத்திற்கு தாரைவார்க்கும் விதமாக இணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததோடு லாரி வாடகையையும் உயர்த்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். கடந்த 5ம் தேதி மின்னஞ்சல் வாயிலாக லாரி உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பி 6ம் தேதி வரவழைத்து ஏற்கனவே வழங்கப்படும் வாடகையான கிலோ மீட்டருக்கு 27.60 காசு இன்னும் குறைத்து கொடுக்குமாறு ஆவின் அதிகாரிகள் லாரி உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.
அதாவது, ஆவின் பால் விநியோக உரிமையை சுமார் 65 மொத்த விநியோகஸ்தர்களிடமிருந்து பறித்து தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் 11 பேரை சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டாக ஒரே நாள் இரவில் நியமனம் செய்தனர். இந்நிலையில் ஆவின் நிறுவனத்திற்கு பால் லாரி ஏற்றி வரும் உரிமத்தை கிறிஸ்டி புட்ஸ் எனும் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் விதமாக தற்போதுள்ள லாரி உரிமையாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே முதல்வர் உடனடியாக தலையிட்டு லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட லாரி வாடகையை உயர்த்தி வழங்கிடவும், ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்.

Tags : Strike , Tanker trucks, Strike, Milk shortages, Danger
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து