×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் மூன்றாண்டு சாதனைகள்: தமிழக அரசு அறிக்கையாக வெளியீடு

சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் 16,382 கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டு வளர்ச்சித் திட்ட பணிகள் நிறைவேற்றபட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. ரூ.2,962 கோடியில் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் எடப்பாடி அரசு செய்துள்ள சாதனைகளை தமிழக அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை  தூர்வார குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை சுமார் 930 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரத்து 955 பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும்,  83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர் வாரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலை துறையின் மூலம் 22 ஆயிரத்து 96 கோடி ரூபாய் செலவில் 21 ஆயிரத்து 109 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 921 புதிய பேருந்துகளும், தூங்கும் இருக்கை வசதியுடன் கூடிய 36 பேருந்துகளும், படுக்கை வசதியுடன் கூடிய 106 குளிர்சாதன பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டகளில் 250 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைபள்ளிகளாகவும், 202 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மழலையர் கல்வியை மேம்படுத்த 2 ஆயிரத்து 381 நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்பு தொடங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை அரசு, துறைவாரியாக பட்டியலிட்டு விரிவாக தெரிவித்துள்ளது.

Tags : Thiruvananthapuram ,Edappadi Palanisamy ,Tamil Nadu , Chief Minister Edappadi Palanisamy, Achievements, Government of Tamil Nadu, Report
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!