×

வனத்தையொட்டிய இடங்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும்: வனத்துறையினர் எச்சரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வனத்தையொட்டிய இடங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனகோட்டத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ரசித்து செல்கின்றனர். மேலும் யானை, வரையாடு, மான், கடமான், சிங்கவால் குரங்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் கண்ணில் தென்படுகிறது.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ளது.  இதனால், வன பகுதியில் உள்ள நீரோடை மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் தற்போது வற்றி வருகிறது. மேலும், எப்போதும் பச்சை பசேல் என காணப்படும் வனத்தில் உள்ள மரங்கள் மற்றும் செடிக்கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளது.  இதன் காரணமாக, அடர்ந்த வனப்பகுதியிலிருந்து யானை உள்ளிட்ட விலங்குகள் நீர் நிலைகளை தேடியும், இரைதேடியும் இடம் பெயர்வது அதிகரித்துள்ளது.

 அதிலும், ஆழியார் பகுதியில் கடந்த சில வாரமாக தண்ணீரை தேடி, யானைகள் பகல் நேரத்திலேயே உலா வருகிறது. மேலும், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் நீர் நிலைகளையும், உணவை தேடியும் ஆங்காங்கே உலா வருவது அதிகரித்துள்ளது. இதற்கிடையே வனத்தையொட்டிய இடங்களில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது கடந்த சில வாரமாக அதிகரித்துள்ள்ளது. அதிலும், விலங்குகள் நடமாட்டம் மிகுந்த ஆழியார் அருகே மற்றும் சேத்துமடையருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதால், வனத்திலிருந்து இரைதேடி வெளியேறி வரும் விலங்குகளால் கால்நடைகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆழியார் அணை பின்புறம் தண்ணீர் வற்றியுள்ளதால், அதில் கால்நடைகள் நடமாடுகிறது. எனவே விலங்குகள் நடமாட்டமுள்ள வன எல்லையருகோ அல்லது அடர்ந்த வனத்திலோ கால்நடைகளை அழைத்து செல்ல கூடாது, விதிமீறி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : areas ,Forest Department ,livestock forest department ,Wilderness Areas , wilderness,grazing livestock, against, leaving
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...