×

காரைக்குடி தெருக்களில் பொது பைப் ‘கட்’: குடிநீருக்கு வீதி, வீதியாய் அலையும் அவலம்

காரைக்குடி: காரைக்குடி தெருக்களில் பொது பைப் லைன்கள் துண்டிக்கபட்ட நிலையில் வாடகை வீடுகளில் உள்ளவர்கள் டெபாசிட் கட்டி இணைப்பு பெற முடியாததால் தண்ணீருக்கு தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் குடிநீருக்கு வீதி, வீதியாய் அலைந்து வருகின்றனர். காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். சிறிய மற்றும் பெரிய அளவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 14 ஆயிரத்துக்கும் மேல் குடிநீர் இணைப்புகள் உள்ளன.

வார்டுக்கு 15 முதல் 20 பொது குழாய்கள் என 72க்கும் மேற்பட்ட பொதுக்குழாய்கள் இருந்தன. 30 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீர் பகிர்மான குழாய்கள் ரூ.18 கோடியே 58 லட்சத்தில் மாற்றப்பட்டுள்ளது. இதில் 6 புதிய போர்வெல், 4 இடங்களில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளன. 67 கிலோ மீட்டருக்கு மேல் குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. நபர் ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்ற நிலையில் இத்திட்டம் ஓரளவு நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின்படி பழைய இணைப்பில் உள்ளவர்கள் கூடுதலாக ரூ. 6000 வரை டெப்பாசிட் செலுத்தி வீட்டு இணைப்பு பெற வேண்டும். புதிதாக இணைப்பு வேண்டுவோர் ரூ.10 ஆயிரம் செலுத்தி இணைப்பு பெற்று கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயம் வீட்டு இணைப்பு பெற வேண்டும் என எழுதப்படாத சட்டத்தின்படி ஒரு சில வார்டுகளை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் இருந்த பொதுகுழாய் இணைப்புகள் துண்டித்துள்ளனர். வசதிபடைத்தவர்கள் டெபாசிட் செலுத்தி வீட்டுக்கு இணைப்பு பெற்றுள்ளனர்.

ஆனால் வசதியற்ற ஏழை, எளிய குடும்பத்தினர் டெபாசிட் செலுத்த முடியாமல் தினமும் ஒரு வீடு என கொண்டு தண்ணீருக்கு அலையும் நிலைக்கு நகராட்சி நிர்வாகம் தள்ளிவிட்டுள்ளது. ஏழை மக்களின் நிலையை சற்றும் பரிசீலனை செய்யாமல் நகராட்சியின் இந்த அடாவடி நடவடிக்கையால் மக்கள் தண்ணீருக்கு தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.  தவிர வாடகை வீடுகளில் உள்ளவர்கள் உரிமையாளர்கள் டெபாசிட் கட்டாததால் தண்ணீருக்கு வீடு, வீடாக அலைகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வசதிபடைத்தவர்கள் டெபாசிட் கட்டி இணைப்பு பெற்றுள்ளனர். சாதாரண மற்றும் ஏழை குடும்பங்களை நினைத்து பார்க்காமல் பொது பைப் லைன்களை துண்டித்து எங்களை வீதி, வீதியாக அலைய விட்டுள்ளனர். கோடைகாலத்தில் தண்ணீருக்கு என்ன செய்வது என தெரியவில்லை. ஏற்கனவே இருந்தது போல் வீதி ஒரு பொது பைப்பாவது போட வேண்டும்’ என்றனர்.

Tags : Karaikudi Street: Road to Drinking Water Karaikudi , Karaikudi
× RELATED காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து...