×

மாதவிடாய் காலத்தில் சமையலறைக்குள் நுழைந்ததால் மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை

பூஜ்: மாதவிடாய் காலத்தில் சமையல் அறையில் நுழைந்ததாக கூறி, 60க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய்  இருக்கிறதா என்று சோதனை செய்த அநாகரீகச் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீசகஜானந்த் பெண்கள் இன்ஸ்டிடியூட்(எஸ்எஸ்ஜிஐ) இயங்கி வருகிறது. சுவாமிநாராயணன் கோயில் டிரஸ்ட் மூலம் இந்த கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் எழுதப்படாத விதி ஒன்று அமலில் உள்ளது. அதாவது இங்குள்ள ஹாஸ்டலில் தங்கி பயிலும் மாணவிகள், தங்களது மாதவிடாய் காலத்தில் சக மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்பதும், பழகுவதும் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விதியை சில மாணவிகள் உடைத்துள்ளதாக தெரிகிறது. மாணவிகள் சிலர் இந்த கட்டுப்பாட்டை மீறிய தகவல் விடுதி காப்பாளருக்கு தெரியவந்ததை அடுத்து அவர், கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். வார்டன் அளித்த புகாரின்பேரில்,  கல்லூரி முதல்வர் தலைமையில்,  விடுதியில் இருந்த 68 மாணவிகளையும் கழிவறைக்கு வரிசையாக அழைத்துச் சென்று அவர்களது உள்ளாடைகளை களையச் செய்து சோதனை நடத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு அம்பலமாகியுள்ளது. இதுபோன்ற சோதனையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. இந்த விவகாரம்  வெளிச்சத்துக்கு வந்து  சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் குழு ஒன்று சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு சென்று   விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில்,  “பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேசுவதற்காக நாங்கள் ஒரு  பெண் ஆய்வாளரின் கீழ்  போலீஸ் குழுவை அனுப்பியுள்ளோம்.  மேலும்  எப்ஐஆர் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். புகார் அளிக்க  முன்வர மாணவிகள்  தயாராக இல்லை. என்றாலும், யாரவது ஒரு மாணவியாவது புகாரை பதிவு செய்ய வருவார் என நம்புகிறோம்” என்று கட்ச் போலீஸ் சூப்பரடென்ட்  சவுரப் டோலும்பியா கூறினார்.

இந்நிலையில்,   குஜராத் மாநில மகளிர் ஆணையம்  இந்த   சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, பூஜ் போலீசாரிடமிருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளதாக அதன் தலைவர் லீலா அங்கோலியா தெரிவித்தார். இதனிடையே, இந்த எஸ்எஸ்ஜிஐ  கல்லூரியுடன் இணைந்த கிராந்திகுரு ஷியாம்ஜி கிருஷ்ணா  வர்மா கட்ச் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தர்ஷனா தோலகியா இதுபற்றி கூறுகையில், சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “மாதவிடாய் ஏற்பட்ட மாணவிகள் விடுதி  உள்ள சக மாணவிகளுடன் ஒன்றாக   சாப்பிடக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது.  இருப்பினும், சில சிலர் இந்த விதியை மீறிவிட்டனர். இந்த  விவகாரம் கல்லூரி நிர்வாகத்தை அடைந்தபோது, ​​சில பெண்கள் தானாக முன்வந்து கல்லூரியின் ஒரு பெண்  ஊழியரிடம் சென்று தன்னை சோதனை செய்ய அனுமதித்தனர். அதோடு, விடுதி விதிகளை மீறியதற்காக   அவர்கள் மன்னிப்பு கேட்டனர்” என்றார்

Tags : Testing students ,kitchen ,menstruation , Testing of students' clothes ,kitchen, during menstruation
× RELATED கிச்சன் டிப்ஸ்