×

முருங்கை மரம் உரசி மின்வயர் அறுந்த தகராறு மருமகள் குத்தி கொலை : போலீசில் மாமனார் சரண்

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே முருங்கை மரம் உரசி மின்வயர் அறுந்த தகராறில் மருமகளை  சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த மாமனார் போலீசில் சரணடைந்தார். பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு திருமணம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (30). பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் வீட்டின் அருகில், அவரது சித்தப்பா ராமன் வசித்து வருகிறார். இவர், கூலி வேலை செய்து வருகிறார். மனைவி இறந்து விட்டார். ஒரு மகன், மகள் உள்ளனர்.
செந்தில்குமார் வீட்டையொட்டி ஒரு முருங்கை மரம் உள்ளது. இந்த மரம், ராமன் வீட்டுக்கு செல்லும் மின்சார வயரில் அவ்வப்போது உரசியது. நேற்று முன்தினம் உரசியதில், மின்சார வயர் அறுந்து விழுந்தது.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. கலைவாணியை தகாத வார்த்தையால் ராமன் திட்டினார். இதனால் மனம் உடைந்த கலைவாணி, இந்த சம்பவத்தை, செந்தில்குமாருக்கு போன் செய்து தெரியப்படுத்தினார். இந்த தகவலை அறிந்த ராமன், ஆத்திரம் அடைந்தார். சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, கலைவாணியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். கலைவாணிக்கு ரத்தம் பீறிட்டது. அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை, மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து, ராமனை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பட்டாபிராம் போலீசில் ராமன் சரணடைந்தார். பின்னர் அவர், வெள்ளவேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Murder ,daughter-in-law ,father-in-law , Murder of a daughter-in-law,Murder Tree
× RELATED கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் இருந்த கைதி தற்கொலை