×

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ, ஈடி அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கின் விசாரணை அறிக்கையை அமலாக்கத் துறை (ஈடி), சிபிஐ ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவில் ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவியில் இருக்கும்போது அமைச்சரவை குழுவின் அனுமதி பெறாமல் முதலீடு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முதலீடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் அதற்கு அந்நிறுவனங்கள் லஞ்சம் அளித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் விசாரணை அமைப்புகள் தொடர்ச்சியாக கால அவகாசம் கேட்டதால், டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதோடு, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி, டெல்லி விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. அப்போது, விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. அதற்கு, சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி 2 வார அவகாசம் வழங்கப்பட்டது.  இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் விசாரணையின் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை தனது அறிக்கையில், வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், சிபிஐ தனது அறிக்கையில், வழக்கு தொடர்பான சில தகவல்களை பெற சட்ட ரீதியாக மலேசிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், மலேசிய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, அடுத்த மாதம் 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

10 கோடி செலுத்திவிட்டு வெளிநாடு செல்ல அனுமதி

கார்த்தி சிதம்பரத்தின் மீது மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் நீதிமன்ற அனுமதியுடன் அவ்வப்போது வெளிநாடு சென்று வருகிறார். கடந்த ஆண்டு மே, ஜூன் மாதம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல ரூ.20 கோடியை பிணைத்தொகையாக செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல், தற்போது அவர் இங்கிலாந்து மற்றும் பிரான்சில் நடக்கும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 14 முதல் 18ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கிய தலைமை நீதிபதி, முந்தைய நடைமுறைப்படி உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் ரூ.10 கோடியை பிணைத்தொகையாக செலுத்த உத்தரவிட்டார். மேலும், நாடு திரும்பியதும் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Chidambaram CBI ,Maxis ,ED ,Chidambaram , CBI, ED file report , Maxis' abuse case , PC Chidambaram
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு: எஸ்ஐடி விசாரணை கோரி வழக்கு