×

மருந்துகள் என்ற பெயரில் ஆன்லைனில் போதைப்பொருள் விற்ற வாலிபர்: கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம்

லக்னோ: ஆன்லைனில் மருந்து விற்பனை என்ற பெயரில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த, உத்தர பிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள அலாம்பாக் பகுதியில் வசிப்பவர் திப்பு சிங் (21).  ஓட்டல் மேலாண்மை பட்டதாரி. இத்துறையில் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையில் ஈடுபட்டார். இதுவும் வெற்றி பெறவில்லை. கடந்த 2018ம் ஆண்டு ஆன்லைன் மூலம் நண்பர் ஒருவர் அறிமுகியுள்ளார். அவர், திப்பு சிங்கை போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுத்தியுள்ளார். அதில் ருசி கண்ட திப்பு சிங், தனியாக ஆன்லைன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப் பொருட்களை அனுப்பினார். இங்கிலாந்துக்கு இவர் அனுப்பிய 2 பார்சல்களை மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு டிசம்பர் 9ம் தேதி கைப்பற்றினர்.

மருந்துகள், உடல் தகுதி பொருட்கள் என அனுப்பப்பட்ட பார்சல்களில் ஒன்றில், 12 ஆயிரம் போதை மாத்திரைகள் இருந்தன. மற்றொரு பார்சலில் 10,200 மாத்திரைகள் இருந்தன. இதேபோல், ருமேனியாவுக்கு கடந்த மாதம் 17ம் தேதி அனுப்பப்பட்ட பார்சலையும் அதிகாரிகள் கைப்பற்றினர். பார்சலில் வாடிக்கையாளர் விவரம் (கேஒய்சி) இல்லாமல் இருந்தது. அனைத்து பார்சல்களும் லக்னோவில் உள்ள ஒரு முகவரியில் இருந்து சென்றுள்ளது. மேலும், இதற்கான கட்டணம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட்டிருந்து. போதைப் பொருட்களுக்கான பணத்தை இந்தியாவில் தடை செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி மூலம் பெற்றுள்ளார்.  

இதை வைத்து திப்பு சிங்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவு  அதிகாரிகள் கைது செய்தனர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு, உலகம் முழுவதும் 600 பார்சல்களை அனுப்பியுள்ளார். கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அவருக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருக்கும் என்பதால், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Plaintiff , Drugs, online, drug, plaintiff
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...