×

அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டால் வயலிலேயே உதிரும் நெல் மணிகள்: வேதனையில் விவசாயிகள்

மேலூர்: மேலூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக நெல் பயிர்கள் உள்ள நிலையில் போதிய அறுவடை இயந்திரங்கள் கிடைக்காமல் வயலிலேயே நெல்மணிகள் உதிரும் நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு போக சாகுபடி பகுதியான மேலூர் பகுதிக்கு கடந்த அக்.10ல் பெரியாற்று கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. போதிய மழையும் அப்போது கைகொடுக்க தாலுகாவில் உள்ள 85 ஆயிரம் ஏக்கரிலும் நெல் பாசனம் செய்யப்பட்டது. தற்போது அவை அனைத்தும் ஒரே நேரத்தில் அறுவடைக்கு தயாராக உள்ளது.
மேலூர் பகுதியில் நெல் அறுவடைக்கு ஆள் பற்றாக்குறை அதிகம் உள்ளதால், பெரும்பாலும் அனைத்து விவசாயிகளும் இயந்திரத்தின் உதவியுடனேயே அறுவடை செய்வது வழக்கம். அறுவடை காலத்தை கருத்தில் கொண்டு தர்மபுரி, சேலம் பகுதிகளில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் மேலூர் பகுதிக்கு வரும்.

ஓரளவிற்கு விளைந்த காலத்தில் இப்படி வரும் வாகனங்கள் போதுமான நிலையில் இருந்தது. ஆனால் தற்போது முழுமையாக விளைச்சல் கண்டுள்ளதால் அறுவடை இயந்திர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மணிக்கு ரூ.2 ஆயிரம் வாடகை பெற்றவர்கள் தற்போது 2,500 வரை தொகையை ஏற்றிவிட்டனர்.அதையும் கொடுக்க விவசாயிகள் தயராக இருந்தும், அதிலும் பெரிய விவசாயிகள் மொத்தமாக அவர்களை மடக்கி தங்கள் வயல்களுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். இதனால் சிறு, குறு விவசாயிகள் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. விளைந்த கதிர்கள் முற்றி, வயலிலேயே உதிரும் நிலைக்கு பல இடங்களில் தற்போது சென்று விட்டது.அரசே இது போன்ற இயந்திரங்களை கொள்முதல் செய்து, விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப குறைந்த வாடகையில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : field , Rice bells, field , agony
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...