சென்னை ஆண்டுக்கு ஆண்டு வருவாயை இழந்து வரும் தமிழக அரசாங்கம், முழுக்க முழுக்க கடன் வாங்கி செயல்பட்டு வருவதாக திமுக எம். எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். 2020-2021ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சில புள்ளி விவரங்களை அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான கலைஞர் ஆட்சியில் 14.34% ஆக இருந்த மாநிலத்தின் உற்பத்தி வருவாய் பழனிசாமி ஆட்சியில் 10.5% ஆக சரிந்துவிட்டதாக தியாகராஜன் கூறியுள்ளார்.
அதாவது ரூ.68,000 கோடி வருவாயை தமிழக அரசு இழந்துவிட்டதாக கூறியுள்ள அவர், அதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.இதேபோல் 18% ஆக இருந்த தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.6%ஆக வீழ்ந்துவிட்டதாக தியாகராஜன் தெரிவித்துள்ளார். அரசின் தவறான நடவடிக்கைகளை இதற்கு காரணம் என்பது அவரது குற்றச் சாட்டாகும். தொழில் முதலீடுகளை ஈர்க்கவோ, உற்பத்தியை அதிகரிக்கவோ கடன் சுமையை குறைக்கவோ தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தியாகராஜன் கூறியுள்ளார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெறுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.