×

எண்ணூர் சின்னகுப்பத்தில் பழுதடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையம்: வாடகை கட்டிடத்துக்கு குழந்தைகள் இடமாற்றம்:விரைந்து சீரமைக்க கோரிக்கை

திருவொற்றியூர்: எண்ணூர், சின்னகுப்பத்தில் உள்ள அங்கன்வாடி மையம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள சிறுவர், சிறுமிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் மண்டலம், எண்ணூர்  சின்னகுப்பத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட  சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து இருந்தது. இதையடுத்து ₹8.5 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு சிறுவர், சிறுமியர்கள் படித்து வந்தனர். இந்த புதிய அங்கன்வாடி கட்டிடமும் தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இதனால் கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே இங்குள்ள சிமென்ட் தரைகள் உடைந்து  பழுதாகியது.
பழுதடைந்த தரையில் எலிகளும், பூச்சிகளும் அதிகமானதால் இங்கு படிக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த பெற்றோர் இந்த அங்கன்வாடி மையத்திற்கு பிள்ளைகளை அனுப்புவதை  நிறுத்திவிட்டனர்.

இதையடுத்து கிராம நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் அருகில் உள்ள ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு இங்கு படித்த எஞ்சிய சிறுவர், சிறுமிகள் அந்த இடத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால் இங்கும் போதிய வசதி இல்லாததால்  கற்றுக்கொடுப்பதற்கும், தேவையான உணவு சமைப்பதற்கும் அங்கன்வாடி பொறுப்பாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே உடனடியாக இந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த அங்கன்வாடி மையம் தரமாக கட்டப்படவில்லை. கட்டிடத்திற்கு அருகிலேயே பள்ளம் தோண்டப்பட்டு அந்த மண்ணை கொண்டு கட்டுமானம் நடந்தது. இதனால் தான் விரைவில் பழுதடைந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் இந்த அங்கன்வாடி மையத்தை வந்து பார்ப்பதில்லை. மீனவர் பகுதி என்பதால் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

எனவே உடனடியாக அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும். தரம் இல்லாமல் கட்டிய சம்பந்தப்பட்ட காண்டிராக்டர் மீது மாநகராட்சி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.  இல்லை என்றால் மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறையின் அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.

கான்ட்ராக்டரிடம் விசாரணை
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ அங்கன்வாடி மையத்தை பழுது பார்க்க திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி உள்ளோம். விரைவில் சரி செய்து விடுவோம். அங்கன்வாடி  கட்டுமான பணி செய்த சம்பந்தப்பட்ட கான்டிராக்டர் மீது  விசாரணை நடத்தி  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Tags : Children ,Anganwadi Center ,building , Nannur, Chinnappuppam, Anganwadi Center
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...