×

மணப்பாக்கம் 157வது வார்டு பகுதியில் மழைநீர் கால்வாய் மீது பால பணிகள் நிறுத்தம்: தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ நடவடிக்கை

ஆலந்தூர்: மணப்பாக்கத்தில் வெள்ளத்தடுப்பு  கால்வாய் மீது பாலம்  அமைக்க, அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   ஆலந்தூர் 12வது மண்டல மாநகராட்சிக்கு உட்பட்ட மணப்பாக்கம் 157வது வார்டு பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு  செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மணப்பாக்கம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையொட்டி மீண்டும் விபத்து ஏற்படாத வண்ணம் பலகோடி  செலவில் வெள்ளத்தடுப்பு அகல மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. தற்போது மணப்பாக்கம் இந்திராநகர் பகுதியின் வழியாக செல்லும் மழைநீர் கால்வாய் மீது தனியார் கட்டுமான நிறுவனத்தினர் பாலம் கட்டி வருகின்றனர்.இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பாலம் கட்டும் பணியினை நிறுத்தக்கோரி கையெழுத்து வேட்டை நடத்தி ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசனிடம் கொடுத்தனர்.

இதனையடுத்து வெள்ளத் தடுப்பு கால்வாய் மீது பாலம் கட்டும் இடத்தினை ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் நேற்று பார்வையிட்டார். அப்போது மழைநீர் கால்வாய் அருகிலுள்ள புறம்போக்கு இடத்தையும் மடக்கி வைத்திருப்பதாகவும்  பொதுமக்கள் அவரிடம்  தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரிடம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால்  பாலம் கட்டும் பணியினை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பணி நிறுத்தப்பட்டது. இதில் ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன் மாவட்ட பிரதிநிதி ஜெயபால், வட்டசெயலாளர்கள் குப்புசாமி, ஜெகதீசன், நிர்வாகிகள் அழகேசன், முனுசாமி, சக்ரவர்த்தி, தீனா உள்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : rainwater canal ,Ward Manappakam ,Manappakam , Manappakkam, 157 Ward, rainwater canal, MLA
× RELATED திருமுல்லைவாயலில் சாலை, மழைநீர் கால்வாய் வசதி: அமைச்சரிடம் கோரிக்கை மனு