×

நெல்லை கோட்டத்தில் பராமரிப்பு இன்றி இயக்கப்படும்: புதிய பஸ்கள்

நெல்லை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 8 கோட்டங்கள் மூலம் சுமார் 23 ஆயிரம் பஸ்களை பல்வேறு வழித்தடங்களில் சேவை மனப்பான்மையுடன் இயக்கி வருகிறது. இதில் ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பழைய பாடாதி பஸ்களை ஓரங்கட்டும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக பல ஆயிரம் கோடி செலவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் வாங்கப்பட்டு 8 கோட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. இதில் கடைநிலை கோட்டமான நெல்லைக்கு போதிய ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களில் புதிய பஸ்களுக்கு தேவையான தொழில் நுட்ப பணியாளர்கள் பற்றாக் குறையாக உள்ளது. தற்போது வாங்கப்பட்டுள்ள புதிய பஸ்களை பராமரிப்புபணி செய்ய தேவையான தொழில் நுட்பணர்கள் இல்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு எடுக்கப்பட்டவர்கள்தான் தற்போதும் பணியில் இருந்து வருகின்றனர். நெல்லை ேகாட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டலங்களில் 5 ஏசி பஸ்கள், 5 ரெட் பஸ்கள் உள்பட சுமார் 275க்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன. நெல்லை கோட்டத்தில் ஆயிரத்து 895 பஸ்களில் 275 பஸ்கள் மட்டும் புதிய பஸ்கள் உள்ளன. இதில் நீண்ட தூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் மட்டும் முறையாக பெயரளவில் பராமரிப்பு பணி செய்து இயக்கப்படுகின்றன.

நீண்ட தூரங்களில் ஓடியாடி ஓய்ந்து போன பஸ்கள் நகர்புரங்களில் இயக்கப்படுகின்றன. நகர்புறம், கிராமபுறங்களில் இயக்கப்படும் பஸ்கள் பராமரிப்பு பணி ஆடிக்கு ஒரு முறையும் அமாவாசைக்கு ஒரு முறையும் செய்யப்படுகிறதாம். பழுதான ேதய்மானம் அடைந்த உதிரி பாகங்களை மாற்ற ஓரங்கட்டப்பட்ட பஸ்களில் இருந்து தரமான உதிரிபாகங்களை எடுத்து இயக்க நிலை பஸ்களுக்கு மாற்றப்படும் அவல நிலையில் போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியால் தள்ளாடி வருகிறது.
அதிகாலையில் பணிமனையில் புறப்பட்டு இரவு நேரத்தில ்பணிமனை திரும்பும் பஸ்களை டிரைவர்கள் கூறும் புகார்கள் அடிப்படையில் பஸ்களை தொடர் இயக்கத்திற்கு தயார் செய்யும் வகையில் தொழில் நுட்பணர்கள் இல்லாத காரணத்தால் பெயரவிற்கு பஸ்கள் பராமரிப்பு, சுத்தப்படுத்தும் பணி, முக்கிய பாகங்களுக்கு கிரிஸ் வைக்கும் பணி, பேட்டரிகள் ஆய்வு பணி, முகப்பு விளக்குகள், பிரேக் உள்ளிட்ட பணிகள் மட்டும் பார்க்கப்படுகின்றன.

விரைவு போக்குவரத்து கழகத்தில் டெப்புடேசன் பணிமுறையில் தொழில் நுட்ப பணியாளர்கள் பல்வேறு பணிமனைகளுக்கு சென்று புதிய பஸ்களை பராமரிப்பு பணி செய்துவருகின்றனர். இத்தகைய காரணத்தால் தொழில் நுட்ப பணியாளர்கள் நிலையான இடத்தில் பணி செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால் குடும்பத்தை கவனிக்க முடியாமல், குழந்தைகளின் கல்வி குறித்து கவனம் செலுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதுகுறித்து தொழில் நுட்ப பணியாளர்கள் கூறுகையில்; தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் தொழில் நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்போதைய பஸ்கள் நவீன தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுந்தாற்போல் புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்தவர்கள் இல்லை. நெல்லை கோட்டத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கு ஏற்ப தொழில் நுட்ப பணியாளர்கள் வேண்டும். நீண்ட தூர பஸ்கள், புதிய பஸ்கள் மட்டும் பெயரளவில் பராமரிப்பு பணி செய்யப்படுகிறது. விரைவு பஸ்கள் நள்ளிரவு முழுவதும் பயணித்து விட்டு பணிமனைக்கு திரும்பும் பஸ்கள் பகலில் பராமரிப்பு பணி மாலைக்குள் செய்யப்பட வேண்டும். பற்றாக்குறை பணியாளர்களால் பராமரிப்பு பணி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது என்றனர்.

Tags : nellai , New buses , nellai Line, without maintenance
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...