×

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு நாடகம் 2 பெண்கள் கைது: பணம், நகை வாங்கி ஏமாற்றியது அம்பலம்

களக்காடு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, கடனாக வாங்கிய நகை, பணத்தை கொடுக்காமல் இருப்பதற்காக இந்த நாடகம் நடத்தியது அம்பலத்துக்கு வந்துள்ளது.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மேலரதவீதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணவேணி (25), பாமா மீனா (26). இவர்களது கணவன்களான முருகனும், புகழ்சேட்டும் சகோதரர்கள். கடந்த மாதம் 27ம் தேதி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது அங்குவந்த கிருஷ்ணவேணி, பாமாமீனா ஆகியோர் மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து மீட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் அளித்த புகாரில் ‘சிதம்பரபுரத்தை சேர்ந்த 4 பேரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியதாகவும் பணத்தை திருப்பி செலுத்திய பின் அவர்கள் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றும் கூறியிருந்தனர்.

இதனிடையே சேதுராயபுரத்தை சேர்ந்த வசந்தா (80) என்பவர் களக்காடு போலீசில் கொடுத்த புகாரில், ‘’எனது மகன் வெளிநாட்டில் வசித்து வருவதால் மருமகள் கனகாவுடன் நான் வசித்து வருகிறேன். கிருஷ்ணவேணி, பாமாமீனா ஆகியோர் எனது உறவினர்கள். கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் வந்து பணம் தந்து உதவும்படியும் கேட்டபோது மறுத்து விட்டேன். மீண்டும் 2 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணவேணி, அவரது கணவர் முருகன், பாமாமீனா, அவரது கணவர் புகழ்சேட் ஆகியோர் வந்து பணம் கேட்டனர். அப்போதுஎன்னிடம் பணம் இல்லாததால் எனது 15 பவுன் தங்கசெயின், 5 பவுன் எடைகொண்ட தங்க நெக்லஸ், 7 பவுன் எடை கொண்ட வளையல் ஆகியவற்றை கொடுத்தேன். இந்த நகைகளை 5 மாதத்தில் திருப்பித் தருவதாக கூறிய அவர்கள், பின்னர் நகைகளை திருப்பித் தரவில்லை.  இதுபற்றி கேட்டதற்கு அனைவரும் என்னை அவதூறாக பேசி, தாக்க வந்தனர். நகைகளை கேட்டால் வெட்டிக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினர். கந்துவட்டி கொடுமை என பொய் புகார் கொடுப்போம் என்று மிரட்டினர்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுபோல் அதே ஊரைச் சேர்ந்த ஜானகியிடம் 21.50 பவுன் தங்க நகைகளையும், யசோதா என்பவரிடம் ரூ 3.50 லட்சத்தையும் பெற்றுக் கொண்டு திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து களக்காடு போலீசார் விசாரித்து கிருஷ்ணவேணி, முருகன், பாமாமீனா, புகழ்சேட் மற்றும் முருகனின் தாய் மயில் ஆகியோர் மீதும் மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேணி, பாமாமீனா ஆகியோரை கைது செய்தனர். முருகன், புகழ்சேட், மயில் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Tags : women ,paddy collector ,Collector ,nellai , nellai, Collector's office, fire-play, 2 women, arrested
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...