×

தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் அம்மன் திருவிழா: 3 நாட்கள் நடுகாட்டில் தங்கி ஆடு, கோழி பலியிட்டு வழிபட்ட பக்தர்கள்

குடியாத்தம்: தமிழக - ஆந்திர எல்லையில் வனப் பகுதியில் அம்மன் திருவிழா நடைபெற்றது. அப்போது, 3 நாட்கள் நடுகாட்டிலேயே பக்தர்கள் தங்கி ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். தமிழக- ஆந்திர மாநில வனப்பகுதியில், குடியாத்தம் அடுத்த மோர்தனா அணையில் இருந்து வனக்காட்டில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் கெங்கன்ன சிரசு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. குடியாத்தத்தில் இருந்து பலமனேர் சாலை வழியாக 23 கி.மீ தூரம் சென்றால் கவுண்டன்ய மகா நதியின் மீது கட்டப்பட்டுள்ள மோர்தனா அணையை அடையலாம். அங்கிருந்து நதி ஓரத்திலேயே அடர்ந்த காட்டு பகுதியில் சுமார் 10 கி.மீ வரை ஒற்றையடி பாதை வழியாக நடந்து சென்றால் நீர்வீழ்ச்சியை அடையலாம். பொதுவாக இந்த நீர்வீழ்ச்சியில் மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

சுமார் 100 அடி உயரத்தில் இருந்து மலை மீதிருந்து மழைநீர் விழுவதால் நீர்வீழ்ச்சியின் கீழே வருடம் முழுவதும் குளம் போன்று தண்ணீர் தேங்கியுள்ளது. கோடை காலங்களில் ஆற்றின் எல்லா இடங்களிலும் நீர் வற்றிவிட்டாலும் இந்த நீர்வீழ்ச்சி குளத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கும். எனவே மோர்தானா வனப்பகுதியில் யானை, கரடி, காட்டுப்பன்றி மற்றும் மான்கள் தண்ணீர் குடிக்கும் இடமாகவும் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு தமிழகம்- ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தை மாதத்தில் இங்குள்ள கெங்கன்ன சிரசுலீஸ்வரரை தரிசிக்க ஆன்மிக பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் ெகங்கன்ன நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக மாறி வருகிறது. சுமார் 100 வருடங்களாக தை மாதத்தில் அடர்ந்த நடுகாட்டிற்கு சென்று பக்தர்கள் வணங்கி வருவதாக மோர்தானா பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் தெரிவித்தார்

இக்கோயில் திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதில், ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதுகுறித்து மோர்தானா கிராம மக்கள் கூறுகையில், ‘நடுகாட்டில் அமைந்துள்ள கெங்கையம்மன் மற்றும் ஈஸ்வரனை தரிசித்தால் குழந்தை பாக்கியம், தீராத உடல் நோய்களுக்கு தீர்வு, தொழிலில் வெற்றி என அனைத்து நலனும் கிடைக்கிறது என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இங்கு அம்மனை வழிபட பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். அங்கு தங்கும் நாட்களில், சிவனுக்கு முதல் நாள் பூஜை நடத்தப்படுகிறது. அப்போது சைவ உணவை சமைத்து படையலிடப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் கெங்கையம்மனுக்கு ஆடு, கோழி போன்றவற்றை பலி கொடுத்து படைத்து சாப்பிடுவது வழக்கம்’ என்றனர்.

Tags : festival ,Amman ,forest ,border ,Andhra Pradesh ,Nadu , Tamil Nadu, Andhra, Border, Forest, Amman Festival, Devotees
× RELATED திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா