×

ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோதே காங்கிரஸ் கட்சி சரிவு தொடங்கிவிட்டது: டெல்லியில் காங்கிரஸ் தோல்வி குறித்து பி.சி.சாக்கோ கருத்து

புதுடெல்லி: டெல்லியில் 2013ல் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோதே காங்கிரஸ் கட்சி சரிவு தொடங்கிவிட்டதாக பி.சி.சாக்கோ கருத்து தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த 8ம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. பாஜக 8 இடங்களில் வென்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு 53 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு கடந்த தேர்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாக அதாவது 38 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். இதனால், காங்கிரஸ் கட்சியினர் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தோல்வி குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 2013ம் ஆண்டில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது முதல் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. குறிப்பாக புதியதாக உருவான ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை கையகப்படுத்திக்கொண்டது. அதை காங்கிரஸ் கட்சியால் இனி ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது. ஆம் ஆத்மி கட்சி இருக்கும் வரை காங்கிரஸால் முன்னேற முடியாது, என்று தெரிவித்துள்ளார்.



Tags : Congress Party ,Sheila Dikshit ,collapse ,Sacco ,defeat ,Election ,Delhi , Sheila Dixit, Congress, Delhi, Defeat, PC Chacko , AAP
× RELATED உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி...