×

சாலையோரம் வசிப்பவர்களுக்கு தங்குமிடம் கோரி வழக்கு சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு  தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தி தர கோரிய வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர்-ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலை ஓரங்களில் வசிக்கும், வீடுகள் இல்லாத மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவதாகக் கூறி அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சமூக நலத்துறை செயலாளர் மதுமதி சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுவதார் க்ரே திட்டத்தின் மூலம் ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் ஆகியோர் தங்குவதற்கு சமூக நலத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.  குடும்பத்தை பிரிந்து வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏதுவாக அவர்களுக்கென தனி வி டுதி நடத்தப்படுகிறது.  சிறார் சீர்திருத்த சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள ஆயிரத்து 112 குழந்தைகள் காப்பகங்களை சமூக நலத்துறை கண்காணித்து வருகிறது. 36 காப்பகங்களை அரசு நேரடியாக நடத்திவருகிறது. மேலும், அரசு சாரா அமைப்புகள் (என்.ஜி.ஓ) கட்டுப்பாட்டில் இருக்கும் காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் மேம்பாட்டுக்காக மாதம் ரூ.2 ஆயிரத்து 160 வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதிகள், செயலாளர் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தோம், அவர் ஏன் ஆஜராகவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயகுமார், செயலாளர் அரசு பணி நிமித்தம் டெல்லி சென்றுள்ளதாக தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், உங்களது அறிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முழுமையாக இல்லை. இந்த வழக்கில் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அப்போது, சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : residents ,shelter ,Social Welfare Secretary ,High Court , Road resident, seeking shelter, Case, Social Welfare Secretary, Appeal, High Court
× RELATED வாய்க்கால் பாலம் இடிப்பு விவகாரம்: இரவு நேரத்தில் பொதுமக்கள் போராட்டம்