×

வங்கிகளில் செலுத்த முடியவில்லை.. வாடிக்கையாளர்களும் வாங்க மறுப்பு: வியாபாரிகளிடம் தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான 10 ரூபாய் நாணயங்கள்

அறந்தாங்கி: வங்கிகளும், வாடிக்கையாளர்களும் வாங்க மறுப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் லட்சக்கணக்கான 10 ரூபாய் நாணயங்கள் முடங்கி கிடப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ரூ.10 மதிப்புடைய பணத்தாளுக்கு மாற்றாக கடந்த 2005ம் ஆண்டு ரூ.10 மதிப்புடைய பை-மெட்டல் நாணயம் (வெளிச்சுற்று பித்தளை, உள் சுற்று எவர்சில்வர்)உலோகத்தில் உருவாக்கப்பட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டது.  தொடர்ந்து கடந்த 2011 ஆண்டு பத்து ரூபாய் நாணயங்கள் அதிக அளவு வெளியிடப்பட்டன. மேலும் தலைவர்கள், நிகழ்வுகளின்போது புழக்கத்தில் விடக்கூடிய நினைவு நாணயங்களாக பத்து ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்  பத்து ரூபாய் நாணயங்களை பேருந்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், மளிகை கடைகளில் வாங்க மறுத்து வருகின்றனர். வங்கிகளிலும் பணத்தாள்களை போல நாணயங்களை எண்ணுவதற்கு இயந்திரம் இல்லாததால், வாங்க மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நுகர்பொருள்களை கடை கடையாக கொண்டு சென்று விற்பனை செய்யும் வினியோகஸ்தர்களிடம் சிறிய கடைக்காரர்கள், தங்கள் வாங்கும் பொருள்களுக்காக பத்து ரூபாய் நாணயங்களை வழங்கும்போது, அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் வினியோகஸ்தர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கி வருகின்றனர். இவ்வாறு அவர்களிடம் சேரும் பத்து ரூபாய் நாணயங்களை வங்கிக்கு எடுத்து சென்றால் வாங்க மறுக்கின்றனர்.  அதேப்போல சில்லறை கடை வியாபாரிகளும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் நுகர்பொருள் வினியோகஸ்தர்களிடம் லட்சக்கணக்கான பத்து ரூபாய் நாணயங்கள் மூட்டை மூட்டையாக முடங்கி கிடக்கின்றன. இதனால் பெரிய அளவிலான தொகை முடங்கி கிடப்பதால் அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதுபோல தனியார் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் 10 ரூபாய் நாணங்கள் பெருமளவில் தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து அறந்தாங்கி பகுதி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் மாருதிதவசிமணி கூறியது: அறந்தாங்கி பகுதியில் உள்ள வினியோகஸ்தர்களிடம் மட்டுமே சுமார் ஒரு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 50 ஆயிரம் பத்து ரூபாய் நாணயங்கள் உள்ளன. இதேப்போல புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல லட்சக்கணக்கான நாணயங்கள் முடங்கி கிடக்கின்றன. இந்த நாணயங்களை நாங்கள் கையாளுவது சிரமம் என வங்கிகளும் கைவிரித்து விடுகின்றனர். இதனால் பெரிய அளவிலான பணம் முடங்குகிறது. பத்து ரூபாய் நாணயங்களை வங்கிகள், கடைக்காரர்கள் வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலியுறுத்தினாலும், வங்கிகள் கூட ஏற்றுக் கொள்வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Banks ,Customers , Merchants, stagnant, millions, 10 rupee coins
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்