×

மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவமனையை சுத்தம் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை நூதன தண்டனை

மதுரை: மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய, அரசு மருத்துவமனை பொதுவார்டை சுத்தம் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை நூதன தண்டனை விதித்துள்ளது. திருச்சி, பிராட்டியூரில் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில், கடந்தாண்டு ஜூலை மாதம் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவர்களுக்கும், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் மோதல் நடந்துள்ளது. அப்போது இருதரப்பினரும் கட்டைகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கிக்கொண்டனர். கல்லூரி வளாகத்தில் துவங்கிய இந்த மோதல் சாலைக்கும் சென்றுள்ளது. மோதலில் 8 பேர் மண்டை உடைந்தது. 4 பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 28 மாணவர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களால் தாக்கி கொள்ளுதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

இதனிடையே இருதரப்பினரிடையே சமாதானம் ஏற்பட்டதால், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி 28 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் அழகுமணி, ‘‘இந்த மாணவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. வழக்கு நிலுவையில் இருந்தால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கும். இருதரப்பினரும் சமாதானமாக செல்ல விரும்புகின்றனர். எனவே, மாணவர்கள் ரத்த தானம் செய்யவோ, ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடவோ, மருத்துவமனையில் பொதுமக்களுக்கான பணிகளை செய்வது என எந்த நிபந்தனை விதித்தாலும் செய்ய தயாராக உள்ளனர்.

இந்த நீதிமன்றம் மாணவர்களின் நலன் கருதி வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘வழக்கிலுள்ள 28 மாணவர்களும், பிப். 22ல் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சென்று பொது வார்டில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது தொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் சான்றிதழ் பெற்று பிப். 26ல் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.


Tags : College students ,conflict ,state hospital ,iCord Branch College ,iCord Branch ,cleanup , Conflict, college students, government hospital, cleaning, Icort branch, neonatal punishment
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு