தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கொலை செய்ய சதி: போலீசில் கட்சித் தொண்டர் புகார்

புனே: புனேயை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தொண்டர் லட்சுமிகாந்த் மோகன்லால் கபியா. இவர் ‘ஷரத் கிரிதா சன்ஸ்குருதிக் பிரதிஸ்தான்’ என்ற சமூக சேவை அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் புனே, சிவாஜிநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். கபியா தனது புகாருக்கு ஆதாரமாக இரண்டு யுடியூப் சேனல்களில் வெளியான செய்திகளை காட்டியுள்ளார்.

2 யுடியூப் சேனல்களில் கூறப்பட்டிருந்த கருத்துக்களின் ஸ்க்ரீன்ஷாட்கள் உள்ளிட்ட 19 ஆதாரங்களை அவர் தாக்கல் செய்துள்ளதுடன் இது தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரிக்கும்படி கோரியுள்ளார். கபியாவிடம் இருந்து புகார் வந்திருப்பதை சிவாஜிநகரில் உள்ள சைபர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்ராம் பேகுடே உறுதி செய்தார். புகார் மீது விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார். இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அங்குஷ் காகடே கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பான விரிவான தகவல்களை கட்சி கேட்டுள்ளது’’ என்றார்.

Related Stories:

>