×

வனகிராமங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: வனத்துறையினர் எச்சரிக்கை

கோவை: கோவை வனகிராமங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து வனச்சாலைகளின் வழியாக அதிகாலையில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட போளூவாம்பட்டி, காரடிமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், மருதமலை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. தற்போது யானைகள் இடப்பெயர்ச்சி காலம் நடந்து வருகிறது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானைகள் ஊருக்குள் நுழைந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வனகிராமங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அதிகாலை நேரங்களில் வனத்திற்குள் செல்லாமல் வனச்சாலைகள், தோட்டங்களில் சுற்றிதிரிகிறது. கோவையில் அதிகாலையில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக பார்வை தூரம் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக யானை சாலையோரத்தில் நின்றாலும் தெரிவது இல்லை. பனிமூட்டம் காரணமாக வனச்சாலைகளில் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை இருச்சகர வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையிர் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பான அறிவிப்புகள் வனகிராமங்களில் உள்ள சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருதமலை பகுதியிலும் காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது.

இதனால், பக்தர்கள் கவனமுடன் செல்ல வேண்டும். அதிகாலை நேரத்தில் படிக்கட்டு வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை மருதமலை சாலையில் நிறுத்த வேண்டாம். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் மருதமலையில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருதமலை முதல் கல்வீரம்பாளையம் வரையிலான சாலையில் வாக்கிங் செல்பவர்கள் வெளிச்சம் வந்த பிறகு வாக்கிங் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது தவிர வனகிராமங்களில் சென்று யானை நடமாட்டம் தொடர்பாக மலைவாழ் மக்களிடம் வனத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


Tags : Forest Department Warning Elephants , Wildlife, elephants walking, hike
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...