×

எம்.சாண்ட் மணலை பயன்படுத்தி மேம்பாலம் கட்டுவதால் இடிந்து விழும் அபாயம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை பகுதியில் உள்ள தென்பெண்ைண ஆற்றின் குறுக்கே விக்கிரவாண்டி-தஞ்சாவூர் நான்கு வழிச்சாலைக்காக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் 1 கி.மீ. தூரம் உள்ளது. ரூ.23 கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த மேம்பாலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்தாலும் கட்டுமான பணிகளுக்கு ஆற்றில் மணல் எடுப்பதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது. இதனால் ஆற்று மணலுக்கு பதிலாக எம்.சாண்ட் மணல் கலந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேம்பால பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து ஒப்பந்ததாரர் கூறுகையில், மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணல் எடுக்கக் கூடாது. மணலுக்கு பதிலாக எம்.சாண்ட் மணல் கலந்து கட்ட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால்தான் மேம்பால பணிகளுக்கு எம்.சாண்ட் மணல் கலந்து கட்டப்பட்டு வருகிறது. இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் அனைத்து பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளுக்கும் எம்.சாண்ட் மணல் பயன்படுத்திதான் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என கூறினார். அரசின் இந்த தடையால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளுக்கு அதே இடத்தில் உள்ள மணலை எடுக்க ஏன் தமிழக அரசு மறுக்கிறது?

மேம்பாலம், சாலைகளை ஆற்று மணலில் கட்டினால் நீடித்த தரம் இருக்கும். மேம்பாலத்துக்கு எம்.சாண்ட் மணல் கலந்து கட்டினால் விரைவில் பலமிழந்து இடிந்து விழும் அபாயம் ஏற்படும். இதை தெரிந்தும் தமிழக அரசு மேம்பால கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணல் எடுக்க அனுமதி மறுக்கிறது. ஆனால் இங்கிருந்து தினமும் பல லாரிகளில் ஆற்று மணல் அள்ளப்பட்டு வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்துக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அரசும் இதற்கு உடந்தையாக இருக்கிறது. எனவே ஆற்று மணலை பயன்படுத்தியே மேம்பாலம், சாலைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : demolition ,bridge , M. Sand sand, upland, risk
× RELATED சென்னை நேப்பியர் பாலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து