×

லத்தேரி அருகே குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட லத்தேரி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் குடியிருப்பு பகுதியில் லத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி பின்புறத்தில் கே.வி.குப்பம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சேகரிக்கும் குப்பைகளை அங்கு கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது.  மேலும், அவ்வாறு எரிக்கப்படும் குப்பைகளால் புகை மூட்டமாக சூழ்ந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல், சுவாச கோளாறு பிரச்னையால் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அப்பணிகள் செயல்படுத்தாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டனர்.   இதனால், அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அப்பகுதியில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சாலை முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுவதால் அவதிக்குள்ளாகின்றனர். இதன்காரணமாக, அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதை தடுத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Latheri ,Areas ,Garbage Burning , Lattery, junk, health disorder
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...