×

நடிகர் விஜய், அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை நோட்டீஸ்

சென்னை:  நடிகர் விஜய் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரமும் 3 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்து, கடந்த ஆண்டு வெளியான `பிகில்’ திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி அதிகளவில் பணம் வசூலானது.

ஆனால் இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், நடிகர் விஜய், விநியோகஸ்தர் சுந்தர் மற்றும் சினிமா பைனான்சியரும் அதிமுக பிரமுகருமான அன்புசெழியன் தரப்பினர் வருமான வரித்துறைக்கு சரியான கணக்கு காட்டவில்லை என்று புகார் வந்தது. இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி காலை சோதனை மற்றும் விசாரணையை துவக்கினர். அன்று காலை நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்தனர். இந்த விசாரணை 7-ம் தேதி மாலை வரை தொடர்ச்சியாக சுமார் 30 மணி நேரம் நடைபெற்றது.

இதேபோல் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமாக மதுரை மற்றும் சென்னையில் உள்ள வீடுகளிலும், அவரது நிறுவனங்களிலும் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.77 கோடி ரொக்கம், 2 பைகள் நிறைய தங்க, வைர நகைகள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள், வெளிநாட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து  3 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஜய, அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் ஏஜிஎஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : executives ,Vijay ,AGS ,Anupshechian ,Anubheshcheyan , Actor Vijay, Anubheshcheyan ,AGS executives , 3 days
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...